Wednesday, June 25, 2025
Home ஆன்மிகம் நாதம் என் ஜீவன்

நாதம் என் ஜீவன்

by Lavanya

பகுதி 1

“ஹரே ராம! ஹரே ராமா!
ராம! ராம! ஹரே! ஹரே!’’
– எனப் பாடியபடி, ராமபிரம்மம் அன்றும் திருவாரூர் கமலாலயக் குளத்தின் கீழ்கரையில், உஞ்சவிருத்தி செய்தபடி நடந்து வந்து கொண்டிருந்தார். செம்பில் அரிசி இட்ட பெண்டிருக்கு மஞ்சள் அட்சதையால் ஆசிர்வதித்தார். அவர்கள் நலமாய் இருக்க கண்களை மூடி பிரார்த்தித்தார். தனக்காக தினமும் செய்கின்ற பிரார்த்தனை நினைவுக்கு வந்தது. இருந்தும் அன்று, ராம பிரம்மத்திற்கு, கோயிலுக்குள் குடி கொண்டிருக்கும் தியாகராஜரிடம் உரக்கப் பேச வேண்டும் போல் தோன்றியது.

“தியாகேசா! நான் மனதில் நினைப்பது உனக்கு கேட்கும். இருந்தும், என் அஞ்ஞானம், உன் கோயில் ராஜகோபுரத்தைப் பார்த்து, நீயாக பாவித்து, உரக்க கேட்கிறேன். ராம நாமத்தை சொல்லியபடி உஞ்சவிருத்தி எடுப்பதும், என்னுடைய ராமருக்கு தினமும் ஆராதனை செய்வதும், எனக்கு உயிரை ஒத்த விஷயம். என்னுடைய மூத்த பிள்ளை ஜம்பேசனுக்கு இதில் நாட்டம் கொஞ்சம்கூட இல்லை.

அடுத்து பிறந்த சுந்தரேசன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை. மனதில் எப்பொழுதுமே ஒரு தீராத கவலை. எனக்குப் பின் யார் இந்த ராம நாம ஜபத்தை செய்வார்கள்? யார் என்னுடைய ராமருக்கு பூஜை செய்வார்கள்? அதற்காக ஒருவனை நீ எனக்குத் தந்து அருள மாட்டாயா!’’ என்று கண்ணில் நீர் வழிந்தது. அவரின் பிரார்த்தனை தியாகராஜரை அசைத்தது. தியாகராஜரின் அருகில் இருந்த கமலாமாம்பிகை புன்னகைத்து இசைவு தந்தாள்.

மறுநாள் அதிகாலையில் ஈசன், ராமப்பிரம்மம் கனவில் தோன்றினார். “ராமப் பிரம்மே! உனக்கு ஒரு பிள்ளை பிறக்கப் போகிறான். அவன் வால்மீகியின் அம்சமாக திகழுவான். நாரதரே அவனுக்கு குருவாய் இருந்து ஆசி அருள்வார்’’ என்றுகூற, பிரார்த்தனை பலித்தது. ராமபிரம்மத்தின் மனைவி சீதம்மா, ஆண் மகனை ஈன்றாள். கணவன், மனைவி இருவரும், குழந்தையை எடுத்துக் கொண்டு தியாகராஜர் சுவாமியின் சந்நதிக்குச் சென்றார்கள். குழந்தையைக் காலடியில் இட்டார்கள். ராமபிரம்மம் நா தழுதழுக்க பதிகம் பாடினார்.

“செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல்
மறிவு உண்டேல் மறுமைப் பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன்போலும் சடைமேல் புனைந்தானை
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே.’’
அருகில் இருந்த மனைவிக்கு பாடல் பற்றிய விளக்கம் சொன்னார்.

`நன்மையைத்தரும் கல்வியும், அதன் பயனாகிய உள்ளத்தெளிவும், அதன் பயனாகிய இறைவன் பற்றும் நமக்கு உள்ளன என்றால், அவற்றோடே இறப்பும், மறுபிறப்பும், வாழ்நாளை இடைமுரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால், இவற்றையெல்லாம் அறிகின்ற அறிவும். அவ்வறிவின் வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின், புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற, பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை, பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ’ என்று விளக்கம் சொன்ன கணவனை, சீதம்மா வியந்து நோக்கினாள்.

“திருவாரூர் ஈசனை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்’’ என ராமபிரம்மம் கூறியபடி இருக்க, “அதனால் நம் மகனுக்கு தியாகராஜன் என்றே பெயர் சூட்டுவோம்’’ என இருவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள். இருவரும் குழந்தையின் வலது காதில் “தியாகராஜன்… தியாகராஜன்.. தியாகராஜன்..’ என்று மூன்று முறை உச்சரித்தார்கள். குழந்தை மலர்ந்து சிரித்தது. இறைவனும் இறைவியும் சூட்சுமமாக குழந்தையை ஆசீர்வதித்து உச்சி முகர்ந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்குப் பின் ராமபிரம்மம் குடும்பத்துடன், தன்னுடைய தாய் வழி சொந்தங்கள் இருந்த திருவையாறுக்குக் குடி பெயர்ந்தார். தியாகராஜனுக்கு ஏழு வயது நிரம்பியது. உபநயனம் முடிந்து, வேதம், உபநிடதம், சுலோகங்கள் மற்றும் பக்தி பாடல்கள் கற்று அறிந்தான். தந்தையே குருவாக மந்திர உபதேசம் செய்வித்தார். அன்று ராம நவமி. ராமபிரம்மத்திற்கு ராமநவமிதான் தீபாவளியைவிட மிகப் பெரிய பண்டிகை நாள்.

காலை முதல் பூஜையை மிகவும் சிரத்தையாகச் செய்துகொண்டிருந்தார். அவர் ராம விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்யும் பொழுதும், பூச்சூடும் பொழுதும், அர்ச்சனை செய்யும் பொழுதும் அருகில் இருந்து, தியாகராஜன் பக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். ராமப்பிரமம் பூஜையின் இறுதிக் கட்டமாக ஒவ்வொரு வேதத்தில் இருந்தும் ஒரு சாகையை ஓதினார்.

பின் ராமர் மேல் ஒரு பக்திப் பாடலை பாடுவது அவர் வழக்கம். அந்தச் சமயத்தில், தியாகராஜர், “எனக்கு நம் ராமருக்காக ஒரு பாடல் பாட வேண்டும் போல் தோன்றுகிறது நான் பாடலாமா?’’ எனத் தயங்கித் தயங்கிக் கேட்டார். “தாராளமாக பாடேன். யாருடைய பாடலைப் பாடப் போகிறாய்? பத்ராசலரா? ஒன்றை மட்டும் கவனத்தில் கொள். இது ராமருக்கான பூஜை. மிகவும் பவித்திரமானது. உனக்கு நன்றாகத் தெரிந்த, முழுமையாகப் பாடக்கூடிய பாடலைப் பாடு!’’ என்றார். தியாகராஜர் கண்களை மூடிக்கொண்டார். ராமனை மனதில் வரித்தார். மெய்யுருகப் பாடத் தொடங்கினார்.

“நமோ நமோ ராகவாய அனிஸம்
நமோ நமோ
ஸுக நுதாய தீன பந்தவே
ஸகல லோக தயா ஸிந்தவே….’’
– பாடல் தொடர்ந்தது.

ஒவ்வொரு சரணமாக தியாகராஜர் பாடப் பாட ராமபிரம்மத்திற்கு சந்தோஷத்திலும் பிரமிப்பிலும் கண்ணீர் பொங்கியது. ராமர் மட்டும் இதற்குத்தானே இவ்வளவு நாள் காத்திருந்தேன் தியாகராஜா! என்பது போல் கீர்த்தனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். எட்டாவது சரணமாக;

“நாக ராஜ பாலனாய
த்யாகராஜ ஸேவிதாய’’

என்று பாடுகையில் தியாகராஜர் கண் திறந்து ராமரைப் பார்த்தார். தன்னிலிருந்து ராமர் இந்த சம்ஸ்கிருத பாடலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது நான் இயற்றவில்லை. நான் இங்கு ஒரு கருவியே! என்ற எண்ணமே அந்த பால தியாகராஜருக்கு இருந்தது. பாடல் முடிந்ததும் ராமபிரம்மம் தியாகராஜரை பார்த்து, “எப்படி? எப்படி? நீ வேறு எங்கேயாவது இந்த பாடலைக் கேட்டிருக்கிறாயா? இது உனக்கே தோன்றிய பாடலா? எனக்கு இருக்கும் சொற்ப ஞானத்தை வைத்து கூறுகிறேன். இந்தப் பாடலை நீ தேசியதோடி ராகத்தில் இயற்றி இருக்கிறாய்.

பந்தவே சிந்தவே தாயினே சாயினே எனச் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் மேல் தியாகராஜ சேவிதாய என்று சொல்லி நிறைவு செய்திருக்கிறாய். ஏழு வயது நிறைந்த ஒரு குழந்தைக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா? நீ என் பிள்ளை என்பதால் நான் இப்படி நினைக்கிறேனா? இல்லை உனக்கு அவ்வளவு சங்கீத ஞானம் நேர்ந்திருக்கிறதா? சீதம்மா உன் பிள்ளை பாடியதைக் கேட்டாயா?’’ என்றதும், தியாகராஜர் மௌனமாய் கை கூப்பி ராமரையும் பெற்றோரையும் வணங்கி நின்றார்.

ஒரு நல்ல தந்தை தன் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய அவசியமான ஒன்று, நல்ல குருவிடத்தில் அவனைச் சேர்த்தல். சரபோஜி மகாராஜா சபையில் சங்கீத வித்வான்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த, சொண்டி வெங்கடரமணய்யாவிடம் தியாகராஜரை ராமபிரம்மம் இட்டுச் சென்றார். சற்று தயங்கிய வெங்கடரமணய்யா, தியாகராஜரின் முதல் கீர்த்தனையைப் பாடச் சொல்லிக் கேட்டார். மெய்சிலிர்த்தார். தான் அவருக்குக் குருவாக இருப்பதைப் பெருமையாகக் கருதினார். குருவின் சிட்சையில் இரண்டு வருடங்கள் கழிந்தன.

கற்றுத் தேர்ந்த போதும் இன்னமும் ஏதோ ஒன்றுதான் கற்க வேண்டி இருப்பதாக, தியாகராஜர் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. தியாகராஜரின் பக்தியும் சங்கீதத்தின் மீது உள்ள ஈடுபாடும் ராமப்பிரும்பத்திற்கு மிகவும் நெகிழ்ச்சியைக் கொடுத்தது. அன்று ராமப்பிரமம் உஞ்சவிருத்தி முடித்து சற்று சோர்வாக வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். தியாகராஜரை அருகில்
அழைத்தார்.

“தியாகராஜா! என்னை நம் ராமன் அழைத்துக் கொள்ளப் போகிறான் என்று தோன்றுகிறது. உனக்கு நான் எதுவுமே செய்யவில்லையே! உனக்கு அதில் வருத்தமா?’’
“நீங்கள் எனக்குத் தந்தை மட்டுமல்ல. என்னுடைய குருவும்கூட! எனக்கு நீங்கள் ராமரைக் காட்டுவீர்கள் என்று நினைத்திருந்தேன். எனக்கு ராமரை தரிசிக்க வேண்டும். இது ஒன்றுதான் என் வாழ்நாள் விருப்பம், குறிக்கோள் என எல்லாமும். இதை உங்களால் மட்டுமே எனக்குச் செய்ய முடியும் என்று நம்பி இருந்தேன். நீங்கள் என்னை விட்டுப் பிரிந்தால் யார் எனக்கு ராமரைக் காட்டுவார்கள்?’’

“ஸ்ரீ ராம் ஜெயராம்.. ஜெய ஜெய ராம்….’’ இந்த நாமத்தை நீ சொல்லிக் கொண்டே இரு! ராமர் கண்டிப்பாக வருவார்! நம்பிக்கைதான் ராமர். நாமம் சொல்லச் சொல்ல அவர் உன்னருகில் வருவார்’’ என்று சொல்லியபடியே தியாகராஜரின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். தியாகராஜரின் கண்களைப் பார்த்தபடியே அவர் உயிர் பிரிந்தது. உஞ்சவிருத்தி பித்தளை செம்பு நழுவியது. தனக்கு ஒரு நல்வழியைக் காட்டிவிட்டுத்தான், தன் தந்தை பிரிந்திருக்கிறார் என்று தியாகராஜர் மனதைத் தேற்றிக் கொண்டார். அவர் மனதில் எப்பொழுதும் ராம நாமமே ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு இணையாக சங்கீதத்தில், தான் கற்றுக் கொள்ள வேண்டியது மேலும் ஏதோ ஒன்று இருக்கிறது என்ற எண்ணமும் தோன்றிக் கொண்டேயிருந்தது.

வானிலிருந்து ஒரு தேவ குரு குதித்து வந்து தனக்கு சங்கீத ஞானம் மொத்தமும் அளித்துச் செல்வார் என்று நம்பினார். குருதானே சீடனைத் தேர்ந்தெடுக்கிறார். ஆரூர் ஈசனின் வாக்குப்படி அது நிறைவேறும் நாள் நெருங்கி வந்தது. தியாகராஜர் தன் தாய் வழி பாட்டனார், வீணை காளஹஸ்தி ஐயர் வீட்டில் இருந்து கொண்டு வந்த “நாரதீயம்’’ முதலிய நூல்களின் ஓலைச் சுவடிகளைப் படிக்கத் தொடங்கினார். அவற்றில் பல பகுதிகள் அவருக்கு விளங்காமல் இருந்தன.

ஒரு நாள் திருவையாறு பஞ்சநதீஸ்வரர் சந்நதியில், அவர் ராமகிருஷ்ணானந்தரைச் சந்தித்தார். சிவனின் அருளின்படி அந்த தவயோகி, நாரத மந்திரத்தை தியாகராஜருக்கு உபதேசித்தார். சங்கீத ஞானத்தைப் பெருக்க நாரத மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தார். ராமரைத் தரிசிக்க வேண்டும் என்ற வேட்கையில் ராம நாம ஜபமும் தொடர்ந்தது. ஊனை உருக்கி, உயிரில் குழைத்து செய்த நாரத மந்திரஜபம் நாரதரை எட்டியது.

சந்நியாசியின் வடிவம் கொண்டு நாரதர் தியாகராஜரின் இல்லத்துக்குள் நுழைந்தார். நாரதருக்கு, ரத்னாகரை வால்மீகியாக மாற்றிய அன்று, தான் எடுத்த கோலம் நினைவுக்கு வந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டார். வால்மீகி அம்சம் இந்த தியாகராஜர் என்பதை நிரூபிக்கும் காலம் வந்து விட்டதாக நினைத்தார். தியாகராஜர், உள்ளே நுழைந்த சந்நியாசியின் கண்களைப் பார்த்து பரவசம் கொண்டார். தேவலோக புருஷர் ஒருவர் வந்திருக்கிறார் என்று அவரது மனம் சொல்லியது. காலில் விழுந்து வணங்கினார்.

“நான் உன்னுடைய கீர்த்தனைகளைக் கேட்டிருக்கிறேன். நீ இன்னமும் நிறைய கீர்த்தனைகளை இயற்ற வேண்டும். பெரிய வாக்கேயகாரராக நீ விளங்க வேண்டும். என் ஆசிகள். உன் வீட்டில் இருக்கும் இந்த ராமர் அன்று அயோத்தியில் இருந்த பொலிவுடன் இருக்கிறார். அவர் என்றும் உன்னுடன் இருப்பார். இதோ இந்த ஓலைச்சுவடிகளையும், என்னை விட்டு என்றும் அகலாத இந்த தம்புராவையும் உன்னிடம் அளித்துச் செல்கிறேன். மீண்டும் வருவேன்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்த தியாகராஜர், சற்று நேரத்தில் அவர் மறைந்து போனதை உணர்ந்தார். ஓலைச்சுவடிகளைத் திறந்து பார்த்தார். “ஸ்வரார்ணவம்’’ என்று தலைப்பிட்டு சங்கீதம் பற்றியான நுட்பமான விஷயங்கள் விளக்கப்பட்டிருந்தன. அதைப் படிக்கப் படிக்க தியாகராஜருக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.

“ராமா! ராமா! இவ்வளவு வாத்சல்யத்துடன் எனக்கு இதை அருளிச் சென்றது யார்? வந்தது யார்?’’ என்றதும் ராமரின் ஆசியுடன் தம்புரா பேசத் தொடங்கியது. “தியாகய்யா! ஓலைச்சுவடிகளையும் என்னையும் உனக்கு அளித்தது தேவர்களில் முதல்வரான நாரதர்தான். இனி நான் உன்னுடனும், ராமருடன்தான் இருக்கப் போகிறேன். எல்லாம் அந்த சிவனின் ஆணைப்படி நடக்கிறது. இனி, நான், நீ ராமர் என மூவர் மட்டுமே. நீ கீர்த்தனைகள் மட்டுமே புனைந்து கொண்டிரு! ராமர் அருள் மட்டுமே செய்து கொண்டிருக்கட்டும்!

நான் உங்கள் இருவரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறேன். உன் ராம ஜபம் தொடரட்டும்!’’ தியாகய்யா என்னை எடுத்தார். ராமர் பாதங்களில் வைத்தார். ராமரின் இதழில் மெல்லிய புன்னகை மலர்ந்ததை நான் உணர்ந்தேன். மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன். பின்பு தியாகய்யா என்னை அவர் கண்களில் ஒற்றிக் கொண்டார். எனக்கு மெய்ச் சிலிர்த்தது.

“யார் என்மேல் இவ்வளவு அன்பு காட்ட முடியும்?’’ என அவர் நெகிழ்ந்தது எனக்குப் புரிந்தது. சில நொடிகள்தான், `நாரதரே உம்மை நமஸ்கரிக்கிறேன்’ என்று சொல்லி உடனே பாடத் துவங்கினார்.நாரத குரு ஸ்வாமி என தர்பார் ராகத்தில் அவர் பாடிய கீர்த்தனம் தியாகய்யாவின் சங்கீத தர்பாரை விரிவடையச் செய்தது. எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. அவரின் ஒவ்வொரு நாளும் செதுக்கப்பட்டுதான் இருந்தது. ராம நாம ஜபம், ராமர் மேல் கீர்த்தனைகளை இயற்றுவது, ராமர் விக்கிரகத்திற்கு பூஜை செய்வது என்பதாக அவர் தன் வாழ்வை வகுத்துக் கொண்டார்.

(தியாகய்யாவின் மகிமை தொடரும்)

கோதண்டராமன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi