Friday, July 18, 2025
Home ஆன்மிகம் நாதம் என் ஜீவன்

நாதம் என் ஜீவன்

by Lavanya

பகுதி 2

நாரத குரு ஸ்வாமி என தர்பார் ராகத்தில் அவர் பாடிய கீர்த்தனம் தியாகய்யாவின் சங்கீத தர்பாரை விரிவடையச் செய்தது. எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.அவரின் ஒவ்வொரு நாளும் செதுக்கப்பட்டுதான் இருந்தது. ராம நாம ஜபம், ராமர் மேல் கீர்த்தனைகளை இயற்றுவது, ராமர் விக்கிரகத்திற்கு பூஜை செய்வது என்பதாக அவர் தன் வாழ்வை வகுத்துக் கொண்டார். உஞ்ச விருத்தியின் மூலமாக வருவதைக் கொண்டு ஜீவனம். நிதிசால ஸுகமா ராமுநி ஸந்நிதி ஸேவ ஸுகமா நிஜமுக பல்கு மநஸா.

என்ற கீர்த்தனையில், எல்லா செல்வங்களுக்கும் மேலாக ராமருடைய சன்னிதிதான் பெரிதென்று எழுதியது போலவே வாழ்ந்தார். யாரிடமும் எந்தப் பொருளும் பெற்றுக் கொள்ளாமல், சீடர்களுக்கு கீர்த்தனைகளைப் பயிற்றுவித்தார்.அன்று காலையில் எழுந்ததிலிருந்தே தியாகய்யா உற்சாகத்துடனும், கொஞ்சம் பதற்றத்துடன் தான் இருந்தார். ராம நாம ஜபம் அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. ராமர்மீது சாய்ந்திருந்த தம்புராவாகிய என்னைக் கையில் எடுத்துக்கொண்டார். நெஞ்சில் சாய்த்துக் கொண்டார். தந்திகளை மீட்டினார்.

நீ தய ராதா
கா(தனே வா(ரெ)வரு கல்யாண ராம
கண்ணில் நீர்மல்க பாடத் துவங்கினார்.

நீ என் மேல் தயை செய்ய மாட்டாயா? நீ எனக்குத் தரிசனம் தர மாட்டாயா? இன்னும் எத்தனை நாட்கள் என்னைத் தவிக்க வைப்பாய்? கீர்த்தனையை தொடர்ந்தபடியே நொடிக்கொரு முறை வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தார். நான் தியாகராஜர் மீது சாய்ந்துகொண்டிருந்தபோது எனக்கு ஒரு பெரிய விஷயம் புரிந்தது, என்ன தெரியுமா? ராமரை விட ராமநாமம்தான் பெரிது என்பது.

நான் ராமரின் மீது சாய்ந்திருந்தபோது இருந்த தெய்வீக உணர்வு, ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் தியாகராஜர் நெஞ்சில் மீது சாய்ந்திருக்கும் பொழுது தோன்றிய தெய்வீக உணர்வு மேலாக இருந்தது.தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தை, தாயின் கொஞ்சல், வாத்சல்யம் எல்லாம் எப்பொழுதும் வேண்டும் என்பதற்காக இடுப்பை விட்டு இறங்குவதற்கு அடம் பிடிப்பது போலத்தான், ராமர் தியாகராஜரின் மனதில் இருந்து இறங்கி, நேரில் வருவதற்கு மனதில்லாமல் இருப்பதாகத்தான் எனக்குப்பட்டது.

வாசல் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. ராமர் வந்துவிட்டார் என்று எனக்குத் தோன்றிய அதே கணமே தியாகராஜருக்கும் தோன்றியிருக்க வேண்டும். என்னை ஒரு கையில் ஏந்தியபடி, விரைந்து சென்று கதவைத் திறந்தார். கோடி சூரியப் பிரகாசத்துடன், சூரிய குல திலகம் ஸ்ரீராமர் வாசலில் நின்றிருந்தார். ஆச்சரியம், ஆனந்தம், ராமரின் தேஜஸ் எல்லாமும் ஒன்று சேர்ந்து தியாகராஜரைத் திக்குமுக்காடச் செய்தது.

கனுகொண்டினி ஸ்ரீராமுனி நேடு’
கீர்த்தனை தொடர்ந்தது.

தியாகய்யா, ராமரின் கால்களைத் தொட்டு, அவரை உள்ளே அழைத்தவாறு ‘ராரா தேவா)தி தேவ
ராரா மஹானுபாவ
ராரா ராஜீவ நேத்ர ரகு வர புத்ர !
பால கனக மய கீர்த்தனை முடியும் முன்பே ராமர் மறைந்து விட்டார்.

ராமர் போய்விட்டாரே என்ற தவிப்பு கூட அவருக்கு கீர்த்தனையாய் வந்தது.
ஏதாவுனரா நிலகடநீகு. நீ எங்கே சென்று விட்டாய் ராமா என கீர்த்தனையாய்க் கேள்வி கேட்டார்.

ஒவ்வொரு நாள் முடியும்பொழுதும் தியாகராஜர், அவர் மனைவி கமலா, மகள் சீதா என மூவரும் ராம விக்கிரகத்தின் முன்னே உட்கார்ந்து கொள்வார்கள். பூஜை அறையை நேர்செய்வது, கோலமிடுவது, பூக்கள் தொடுப்பது என்று ஏதாவது ஒரு வேலையை அவர்கள் செய்து கொண்டே, கீர்த்தனைகள் பாடுவார்கள். சங்கீதம் பற்றி விவாதிப்பார்கள். ராமாயணக் கதையைப் பற்றிப் பகிர்ந்து கொள்வார்கள்.

அந்தக் காட்சி பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் ரம்யமாக இருக்கும். ராமனும் மௌனமாக புன்னகைத்துக் கொண்டே கேட்பதாகத்தான் எனக்குப் படும். அன்றும் அப்படித்தான் ‘சீதம்ம மாயம்மா’ என தியாகராஜர் பாட, கமலம்மா ‘‘தன் தாயின் பெயரும், மகளின் பெயரும் இக்கீர்த்தனையில் வருவதால் உன் தந்தையின் குரலில் ஒரு துள்ளல் தெரிகிறது பார்” எனச் சொல்ல குதூகலத்தில் மகள் கைதட்டினாள். ‘‘அம்மா! உனக்கு மிகவும் பிடித்த கீர்த்தனை எது ?” என்று கேட்க, “எல்லாமும் பிடிக்கும். இவர் எழுதியது எல்லாமும் பிடிக்கும். இந்த க்ஷணம் எனக்கு இவர் ‘நாதலொலுடை’ பாடிக் கேட்க வேண்டும்போல் இருக்கிறது” என்று சொல்லி முடிக்கும் முன்பே, கல்யாண வசந்த ராகத்தில் தியாகராஜர் நாதலோலுடை
கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார்.

வெளியில் மழைத் தூரல். மண்வாசனையையும் தோட்டத்தில் இருந்த மல்லிகைப்பூ வாசனையையும் பூஜை அறையில் நிலவியதை என்னால் உணர முடிந்தது. தெய்வீகச் சூழலில், ராமன் உட்பட எல்லோருமே திளைத்திருந்தோம். பின் உய்யாலலூகவய்ய ஸ்ரீராம என்ற கீர்த்தனையைப் பாடி ராமனைப் பள்ளி கொள்ளச் செய்தார். ராமனின் வலது கரத்தில் கோதண்டம், இடது கரத்தில் நான், மனது அன்று போல் அவ்வளவு சந்தோஷத்தில் எனக்கு திளைத்ததேயில்லை. என் கண்ணே பட்டுவிடப் போகிறது என்று நான் பயந்தேன். ராமனின் இடது கரம் என்னை இறுக்கிக் கொள்வதை என்னால் உணர முடிந்தது. நாதலோ லுடை பாடல் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. ராமனின் திருமேனியின் நெருக்கம், அவர் சூடியிருந்த துளசி மாலையின் வாசம் என எல்லாமும் சேர்ந்து நான் அயர்ந்து விட்டேன்.

‘‘ராமா ராமா என்னை விட்டு நீ எங்கே சென்று விட்டாய்?” என்ற தியாகராஜரின் குரல் கேட்டு நான் விழித்தேன். அந்த பூஜை அறையில் இருந்த ராமர் எங்கே சென்று விட்டார்? அவரின் இடது கையில் இருந்த நான் இப்பொழுது சுவரில் சாய்க்கப்பட்டு நிற்பது புரிந்தது.தியாகராஜர் தம்புராவாகிய என்னை எடுத்துக் கொண்டார். தன்னுடைய நெற்றியை என்னுடைய தந்திகளின் மேல் வைத்துக்கொண்டு கண்ணீர் மல்கினார்.

‘‘ராமா ஏன் என்னை விட்டு நீ பிரிந்து விட்டாய்? நான் செய்கின்ற பூஜைகளில் குறைவு இருந்திருக்கலாம். என்னுடைய கீர்த்தனைகள் உனக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். நான் எங்குச் சென்றாலும், காவேரி ஆற்றுக்குச் குளிக்கச் சென்றால் கூட உன்னிடம் சொல்லாமல் சென்றதில்லையே! நீ மட்டும் என்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டாய். நான் இப்பொழுது என்ன செய்யட்டும். ராமா! ராமா! நீ இல்லாத நான் என்ன செய்ய முடியும். எனக்கு தியாகராஜரைப் பார்க்கப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

ஒருவர் துயரில் இருக்கையில், அவருக்கு ஆறுதல் கூறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. மிகவும் கடினம். ஏதோ ஒன்றை மனதில் நிறுத்தி நாம் பேச, கேட்பவரின் புத்தி வேறுவிதமாக யோசித்து, துயரத்தைப் பெரும் துயரமாக மாற்றி விடும் அபாயம் இருக்கிறது. பயம் எனக்கு இருந்த போதும், தியாகராஜர் மேல் நான் கொண்ட பக்தி, அவரிடம் ஆறுதலாகப் பேச வேண்டும் போல் இருந்தது. ‘‘உங்களுக்காகத்தான் ராமரே நேரில் தரிசனம் தந்து, ஆசிகளும் அளித்து உள்ளாரே! தொலைந்து போனது ஒரு விக்ரஹம்தானே. ராமரை பிரார்த்தித்தால் இன்னொரு விக்ரஹம் தந்துவிட்டு போகிறார்.

இதற்காக ஏன் அழுகிறீர்கள்? வாழ்வே முடிந்தது போல ஏன் நினைக்கிறீர்கள்?” நான் முடிக்கும் முன்பே, தியாகராஜர், ‘‘என் ராமர்! என் ராமர்! தொலைந்து போனது இரண்டரை அங்குல விக்கிரகம் என்றா நினைக்கிறாய்? வெறும் ஐம்பொன் சிலை என்றா நினைத்து விட்டாய்? அது என் ராமர். என் தந்தை, என் பாட்டனார், முப்பாட்டனார் என எத்தனை பேர் பூஜித்திருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை பூஜைகளை என் ராமர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்!

மந்திரங்கள் சொல்லி அபிஷேகங்கள் செய்து என் ராமர் ஆவாகனம் செய்யப்பட்டு இருக்கிறார். வெறும் உலோகச் சிலை அல்ல அது. என் கீர்த்தனைகள் அனைத்தும் தோன்றிய தலைக்காவிரி அல்லவா அது! அந்த ராமர் விக்கிரகம்தான் எனக்கு எல்லாமே. ஒன்று சொல்லட்டுமா? ஐம்பது படி பாலில் ஒரு படி தண்ணீர் கலந்தாலும், கிடைப்பது ஐம்பத்து ஒரு படி பால். மனிதன் உருவாக்கிய உலோகச் சிலை ஒரு படி பாலைப் போல. என் ராமர் வேறு. ராமர் விக்ரஹம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான்.

“அவர் சொல்வதை நான் புரிந்து கொண்டேன். இதனிடையில், வாசலில் யாரோ தியாகராஜரின் அண்ணன்தான் ராமரின் சிலையைத் தூக்கிச் சென்று விட்டதாகப் பேசிக் கொள்வது என் காதில் விழுந்தது. தியாகராஜர் கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் அடைந்தார். ‘‘நான், ராம பக்தி என்கின்ற சாம்ராஜ்யத்தில் ஒரு பக்தன். என்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது ராமன்தானே. என்னைக் காக்க இருப்பதும் ராமன்தானே. இந்த நிகழ்வு ஏன் நிகழ்ந்தது? யாரால் நிகழ்ந்தது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது? ஆராய ஆராய புத்தி தடுமாறும். நிம்மதி தொலையும். கேள்விகள் நிற்காது. கேள்விகள் துரத்திக் கொண்டே இருக்கும்.

எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களை மனது ஆராய்ந்து கொண்டேதான் இருக்கும். சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் போகலாம். பதில் தெரியாத கேள்விகளுடன் புத்தியை வைத்துக் கொள்வதை விட, கேள்விகளே கேட்காத மனசு உத்தமமல்லவா. ராமனின் மேல் நம்பிக்கையும், பக்தியையும் வைத்துக் கொள்கின்ற மனசு உன்னதமல்லவா. எனக்கு ஒன்று புரிந்து விட்டது. நான் இன்னமும் என் ராமனை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னமும் நிறைய பூஜிக்க வேண்டும். இன்னமும் நிறைய நாமம் சொல்ல வேண்டும். இன்னமும் நிறைய கீர்த்தனைகள் செய்ய வேண்டும். ராமா! ராமா! என நான் ராமனில் கரைந்து போக வேண்டும். ராமன் கண்டிப்பாகக் கருணை செய்வார். ராமன் அருளின் ஆழியான்.”

தியாகராஜரின் தெளிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ராமரின் மேல்தான் எனக்கு கொஞ்சம் சந்தேகம். ஏனெனில் முந்தைய இரவு அவரின் புன்னகையில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. குறும்பு கொஞ்சம் எட்டிப் பார்த்தது போல் இருந்தது. ராமர் தனது ராமாவதாரத்தில் மிகவும் நியாயமுடனும், தர்மத்துடனும் இருந்தது அலுத்துப் போய் இருக்கும். தனக்குப் பின் நடந்த கிருஷ்ணாவதாரத்தின் சாயலை செய்து பார்க்க வேண்டும் என்று முயன்றிருப்பாரோ என்ற சந்தேகம் உண்டு. இல்லையெனில், தியாகராஜரை விட்டு ராமராவது பிரிவதாவது அல்லது அவரைப் பிரிப்பதாவது!

தியாகராஜர் முன்னிலும் நிறைய கீர்த்தனைகள் புனைந்தார். சிறிது நாட்களிலேயே, சொல்லி வைத்தாற் போல் ராமர் தியாகராஜர் கனவில் தோன்றினாராம். காவேரி ஆற்றில் தான் இருப்பதாகச் சொல்லி தன்னை எடுத்துச் செல்லவும் சொன்னாராம்.ஒரு வழியாக நாடகம் முடிந்ததில் எனக்கு திருப்தி. இனி தியாகராஜர் பாடும் கீர்த்தனைகளை ராமரின் முன்னிலையில் கேட்கலாம். காவிரி ஆற்றில் இருந்து விக்கிரகத்தை தலையில் சுமந்தபடி தியாகராஜர் வந்து சேர்ந்தார்.

பூஜை அறையில் வைத்து பூமாலைகள் சூட்டினார். துளசி மாலையைச் சார்த்தினார். ‘விளையாட்டுக்குக் கூட என்னை விட்டு நீ எங்கும் சென்று விடாதே ராமா! அப்படிப் போக வேண்டும் என்றால் என்னையும் கூட்டிச் சென்று விடு.’ இறைஞ்சினார். ராமரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்வது போல் இருந்தது. கண்ணில்லாத ஒருவன் பார்வையைப் பெற்று, இழந்து, பின் பெற்றது எப்படி இருக்குமென்றால், தியாகராஜர் நிலையை ஒத்துதான் இருக்கும்!தியாகராஜர் என்னை எடுத்து சுருதி மீட்டி,லாவண்ய ராம கனுலார ஜூடவே. பாடப் பாட ராமரின் முகத்தில் லாவண்யம் கூடியது.எனக்கு எவ்வளவு கொடுப்பினை! ராமருடனும் தியாகராஜருடனும் இருப்பது!

கோதண்டராமன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi