‘‘நான் நாட்டில் இருந்ததை விட காட்டுக்குள் இருப்பதையே பாதுகாப்பாக உணர்கிறேன்’’ என சொல்கிறார் தர்ஷினி. வன உயிரின புகைப்பட கலைஞராக இருக்கும் இவர் பல மாநிலங்களில் உள்ள காடுகளுக்கும் சென்று அங்குள்ள வன உயிரினங்கள் சார்ந்து புகைப்படங்கள் எடுத்து வருகிறார். முக்கியமாக நம் நாட்டின் தேசிய விலங்கான புலிகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அவைகளை படம் பிடித்தும் வருகிறார். மேலும் அவரைப் போல் இருக்கும் பெண் வன உயிரின புகைப்படக்காரர்களையும் ஊக்குவித்து வருகிறார்.
‘‘நான் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. பட்டப்படிப்பு முடித்தவுடன் ஆறு வருடம் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்தேன். கடுமையான பணிச்சுமையும் அதோடு வேலை மீதான பிடிப்பின்மையும் எனக்கு வாழ்க்கையின் மீதான சலிப்பை ஏற்படுத்தியது. சிறு வயதிலிருந்தே இயற்கையின் மேல் கொண்ட காதலும், காடு மீதான வியப்பும் என்னை வனம் நோக்கியும் வனவிலங்கு சார்ந்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. சமூக ஊடகங்களில் பிறர் பதிவு செய்யும் வன உயிரின புகைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, நாமும் ஏன் இதை முயன்று பார்க்கக்கூடாது என்று வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது குறித்து கற்றுக் கொண்டேன்.
முதலில் துடிப்பும் ஆர்வமும் வேகமும் இருந்த போதிலும், இதை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்விதான் எனக்குள் இருந்தது. ஹர்ஷா நரசிம்மமூர்த்தி என்ற புகைப்பட கலைஞரிடம் வன உயிரினங்களை படம் பிடிப்பது குறித்தும் காடு பற்றியும் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டில் வன உயிரின புகைப்படங்கள் எடுப்பதற்கு ஆரம்பத்தில் நான் புகைப்படம் எடுக்க நீலகிரி காட்டுக்கு செல்வேன். அங்குள்ள தேயிலை தோட்டங்களில் சிறுத்தைகளை பார்த்திருக்கிறேன்.
ஆனால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை. நான் எடுப்பதற்குள் அவை மறைந்துவிடும். நான் முதலில் எடுத்த புகைப்படம் கர்நாடகா, கபினி காடுகளில் இருக்கும் வங்காள புலியைதான். அந்த புலியின் பெயர் ஏரோவ் ஹெட். இன்று இந்தியாவின் பல்வேறு வனங்களுக்கு சென்று விலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறேன்’’ என்றவர் வனம் குறித்தும் வன உயிரினங்கள் குறித்தும் பேசத் தொடங்கினார்.
‘‘புகைப்படம் எடுப்பது என் வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது என்றுதான் நான் சொல்வேன். ஒரு புகைப்படத்தை பார்ப்பவர்கள் அதற்கு ஆயிரம் கதைகள் சொல்லலாம். ஆனால் அந்த புகைப்படத்திற்கு பின் இருக்கும் நிகழ்வுகளும் கதைகளும் எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நான் பார்த்து ரசித்த ஓர் அழகான பொழுதை அந்த கனத்தில் நிறுத்தி தனக்குள் பதிய வைத்துக் கொள்கிறது என் கேமரா. அந்த புகைப்படத்தை நான் எப்போது எடுத்து பார்த்தாலும் எனக்கு அந்த நாளும் அந்த நாளில் நடந்தவையெல்லாம் நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். இதுதான் புகைப்படத்தின் சிறப்பு.
புலிகளும், வனமும் எனக்கு யதார்த்தத்தையும், சமநிலையையும் கற்றுக்கொடுக்கிறது. ஒரு புலியின் பார்வையில் நான் வெறும் வெற்று மனிதன் தான். என்னை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ புலி பார்ப்பது இல்லை. இது எனக்கு சமத்துவத்தை கற்றுக்கொடுக்கிறது. நான் பார்த்த ஒன்றை வார்த்தைகளால் சொல்லி புரிய வைப்பதை விட அதை புகைப்படமாக காட்டும் பொழுது அதன் நோக்கம் முழுமை பெறுகிறது.
மேலும் அந்த விலங்குகளை குறித்தும் பேசவைக்கிறது. உதாரணத்திற்கு, நான் ரத்தம்பூரில் உள்ள ஒரு புலியை புகைப்படம் எடுக்கிறேன் என்றால் அது எங்கு உள்ளது, எப்படி உள்ளது, நான் புகைப்படம் எடுத்த காலகட்டத்தில் அதன் உருவமும் தடிமனும் எப்படி இருந்தது என்றும் அதன் இருப்பும் பதிவு செய்யப்படுகிறது. வருங்காலத்தில் அந்த புலியை அதனுடைய பற்களுக்காகவோ அல்லது நகங்களுக்காகவோ அதை வேட்டையாடுவதில் இருந்தும் நான் எடுத்த புகைப்படம் தடுக்கிறது.
சில சமயங்களில் வயல்வெளிகளில் புலிகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக அங்கிருக்கும் விவசாயிகள் மின்னழுத்த கம்பிகளை அமைத்து இருப்பார்கள். அந்த கம்பிகளை தாண்டும் போது, விபத்தில் புலிகள் இறந்து போவதும் உண்டு. புலிகளோ மற்ற விலங்குகளோ யாரும் தன்னை சீண்டாத வரையில் தாக்குவது இல்லை. இந்த மாதிரி விபத்தினால் புலிகள் இறந்து போவதை தடுக்க அரசுதான் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.
புகைப்படம் எடுக்க போகும் முன் நாம் புகைப்படம் எடுக்கும் விலங்கின் குணாதிசயங்களை முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். அந்த விலங்கு எங்கு வரும், எந்தப் பகுதிகளில் அதிகமாக செல்லும் என்பது வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக நாம் புலியை தேடுகிறோம் என்றால், மானை வேட்டையாட புலி வரும். மான்கள் புலி தன் கூட்டத்தை தாக்க வரும் போது எச்சரிக்கை செய்ய ஒரு ஒலியை எழுப்பும். அதை வைத்து புலி வருவதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பகலில் படம் பிடிக்கப்போகிறோமா அல்லது இருளிலா என்று அதுக்கு தகுந்தார் போல் கேமராவில் ஒளி அமைப்பை மாற்றி அதன் வருகைக்காக காத்திருக்க வேண்டும். இது எல்லாம் அமைந்து விட்டாலும் பருவநிலையை புரிந்து கொள்வதுதான் நமக்கு இருக்கும் சவாலே. மத்திய காடுகளில் 47 டிகிரியை தாண்டியும் கூட வெயில் அடிக்கும். அதை பொறுத்துக்கொண்டு புகைப்படம் எடுப்பது என்பது பெரிய சவால். மேலும் காட்டிற்குள் எது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அதனால் நாம் பிரேமை மனதில் வைத்து படம் பிடிக்க முடியாது. கேண்டிட் ரக படங்களையே நாம் எடுக்க முடியும். விலங்குகளுக்கு என்றும் நம் கேமரா கண்களுக்கு போஸ் கொடுப்பது கிடையாது. அவை நம் கண்களில் சிக்கும் போது அப்போது எடுக்கக்கூடிய புகைப்படங்கள்தான் பேசும்.
பொதுவாக புலியையோ அல்லது மற்ற விலங்குகளையோ எளிதில் காடுகளுக்குள் பார்க்க முடியாது. அவற்றை கண்டுபிடிப்பதும் எளிதான காரியம் இல்லை. விலங்குகளின் கால் தடங்கள் தான் அவற்றை கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி. கால் தடங்களை வைத்து அது எந்தத் திசையில் சென்றுள்ளது, அந்த கால் தடம் எந்த விலங்குடையது என்றும் கண்டறியலாம். சில வேளைகளில் புகைப்படம் எடுக்க காட்டிற்குள் வாகனத்தில் செல்வோம்.
வாகனத்தின் தடம் அவற்றின் கால் தடத்தினை அழித்திடும். அதை தவிர்ப்பதற்காகவே ஒரு கட்டத்திற்கு பிறகு அவை வரும் இடத்திற்கு முன்கூட்டியே நடந்தே சென்றுவிடுவேன். அங்கு விலங்கின் வருகைக்காக கொக்கு மீனிற்காக காத்து இருப்பது போல் நான் கேமராவோடு காத்திருப்பேன். சில சமயம் நாள் முழுவதும் காட்டிற்குள் அலைந்து திரிந்திருப்போம். ஆனால் எந்த விலங்கும் கண்ணில் தென்படாது. அதனால் புகைப்படம் எடுக்காமலும் வந்திருக்கிறேன். சில சமயம் காலை முதல் மாலை வரை கண்களில் புலி தென்படாது. இனி வராது என்று கிளம்பும் போது, திடீரென தலை காட்டும். அந்த நேரத்தில் புகைப்படம் எடுக்க போதிய வெளிச்சம் இருக்காது’’ என்றவர், தான் எடுத்த முக்கிய புகைப்படங்கள் குறித்து பேசத் தொடங்கினார்.
‘‘எனக்கு ரத்தம்பூர் காடுகளுக்கு சென்று புகைப்படம் எடுக்க மிகவும் பிடிக்கும். அந்த காடு அழகாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அது மச்சிலி என்ற பெண் புலி ஒன்று வாழ்ந்த காடு. முதலையிடம் சண்டையிட்டு வென்ற வீர வரலாறு கொண்ட புலி அது. தன் இருப்பிடத்தை ஆளுமையோடு வழிநடத்திச் சென்றுள்ளது. இப்போது அந்த புலியின் பேத்திகள் குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றை படமெடுக்க என் மனம் ஆர்ப்பரிக்கும்.
அடுத்து மறக்க முடியாத சம்பவமாக நினைப்பது ஒரு மழைக்காலத்தில் காட்டுக்குள் வீரா என்கிற பெண் புலி மற்றும் அதன் குட்டிகளை புகைப்படம் எடுக்க நான் காத்துக்கொண்டிருந்தேன். தான் வேட்டையாடியதை தன் குட்டிகளுக்கு கொடுக்க குட்டிகளை அழைத்து கொண்டிருந்தது. அந்த குட்டிகள் அம்மாவுடன் சேர்ந்து வேட்டையாடியதை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மழையும் வரவே சுற்றிலும் பச்சை வனப்புக்கு மத்தியில் அந்த காட்சியை படம் பிடிக்க முடிந்தது. இது போல் பல நினைவுகளை கொண்டுள்ளது நான் எடுத்த ஒவ்வொரு புகைப்படங்களும். கால சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விலங்குகளின் நடமாட்டங்கள் மாறுபடும். மத்தியில் உள்ள காடுகளில்தான் புலிகளை அதிகமாக காண முடியும்.
கர்நாடகாவில் சிறுத்தைகளையும், நீலகிரியில் யானைகள் மற்றும் மழைக்காலங்களில் புலிகள் என காடுகள் மற்றும் பருவகாலங்களுக்கேற்ப புகைப்படங்கள் எடுப்பேன். அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை பறவைகளை படம் பிடிப்பேன். புகைப்படம் எடுப்பதில் இந்தியாவில் பெரியதாக சம்பாதிக்க முடியாது. நான் எடுத்த புகைப்படங்கள் பலவற்றை வெவ்வேறு வலைத்தளங்களில் நிறைய முறை பார்த்ததுண்டு. இதனால் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும், ஊக்கத் தொகையும் கிடைக்காமல் போகிறது.
வன உயிரின புகைப்படங்கள் எடுப்பதை எடுத்தவுடன் ஒரு தொழிலாக அல்லாமல், இதை ஒரு பொழுதுபோக்காக, விடுமுறையின் போது வனத்திற்கு செல்லுதல் என தொடங்க வேண்டும். இதை சாத்தியப்படுத்தவே நாம் பெரிய முதலீடை செய்ய வேண்டி இருக்கிறது. கேமரா மற்றும் இதர கருவிகளை பெரிய விலை கொடுத்து வாங்கினால்தான் நாம் நினைக்கும் புகைப்படத்தை எடுக்க முடியும். மேலும் புகைப்படம் எடுப்பதை கற்றுக்கொடுப்பவர்களும் அதற்கான தொகையை எதிர்பார்க்கிறார்கள்.
கற்ற பின் புகைப்படம் எடுக்க பிற மாநிலங்கள், காடுகள் என செல்லும் போது அதற்கான செலவுகள், அங்கு நம்மை காட்டுக்குள் அழைத்து செல்பவர்களுக்கான தொகை என பெருமளவில் பொருளாதாரம் தேவைப்படும். ஆனால் இதை முற்றிலும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நான் கற்றுக் கொண்டவற்றை மற்றவர்களுக்கு சொல்லித் தந்து, அவர்களை வழிநடத்துவதில் தீர்க்கமாக உள்ளேன்.
நான் கேமராவை கையில் ஏந்திய போது, எங்க வீட்டில் பெரிய அளவில் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால், காலம் பதில் சொல்லும் என்பது என் வாழ்க்கையில் நிகழ்ந்தது. என் புகைப்படங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது. அதே சமயம் வனவிலங்கு துறையில் பெண் புகைப்படக் கலைஞருக்கான பங்கு குறைவு, காரணம், பொருளாதாரம், சமூகம் இன்றும் பெண்களை பார்க்கும் பார்வை. என் புகைப்படத்தைப் பார்த்து என்னை அழைப்பவர்கள் நான் ஒரு ஆண் என்ற எண்ணத்தில்தான் என்னிடம் பேசுவார்கள். வன உயிரின புகைப்படக் கலைஞர் ஆணாகத்தான் இருப்பார் என்ற கண்ணோட்டம் மாற வேண்டும். பெண்ணாலும் அந்தக் கலையினை கையில் எடுத்து செய்ய முடியும் என்று பலருக்கு புரிய வேண்டும்’’ என்கிறார் தர்ஷினி.
தொகுப்பு: மா.வினோத்குமார்