மும்பை: ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் புதிதாக அலாவுதீன் என்ற முதலீட்டு மேலாண்மை தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு துறையில் கால் பதிக்கிறது என்றால் அதே துறையில் கோலோற்றி கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் கலக்கம் ஏற்படும். காரணம் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதில் எப்போதுமே வல்லமை படைத்தது ரிலையன்ஸ். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் களமிறங்கியுள்ள ஜியோ பிளாக்ராக், இப்போதும் அதற்கான தளத்தில் பெயரை அலாவுதீன் என வைத்திருக்கிறது.
அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையில் கேட்பதையெல்லாம் கொடுக்கும் இந்த அற்புத விளக்கு அதுபோல தான் தங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் சிறப்பான லாபம் தருவோம் என்ற நம்பிக்கையை ஒரு வார்த்தையில் சொல்லி இருக்கிறது இந்நிறுவனம். ஜியோ பைனான்சியல் சர்விஸ் லிமிடெட் மற்றும் அமெரிக்காவை தலமாக கொண்ட பிளாக்ராக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சம பங்கில் தொடங்கியது தான் jio blackrock asset management private limited நிறுவனம்.
சந்தை ஒழுங்குமுறை ஆணையமான சிபியிடம் கடந்த மே 26ம் தேதி அனுமதி பெற்ற ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் நிறுவனம் தற்போது தனித்துவமான முதலீட்டு மேலாண்மை தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவெறும் டிரைலர் தான், முதலீட்டை எளிதாக அணுக கூடியதாகவும் மலிவு விலையில் மாற்ற நாங்கள் இருக்கிறோம் என ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் கூறியுள்ளது. அந்த வகையில் ஏராளமான மியூச்சுவல் திட்டங்கள் நிதி சந்தையில் கொட்டி கிடக்கும் நிலையில் ஜியோ பிளாக்ராக் என்ன செய்ய போகிறது என்பது முதலீட்டாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.