திருப்போரூர்: கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு ஊராட்சியில் தனியார் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சுகாதாரமான முறையில் தயாரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்றும், சுகாதாரமற்ற குடிநீர் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும், காலாவதியான பாட்டில்களை திரும்ப பெறாமல் மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். தொடர்ந்து திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று மாலை அந்த குடிநீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்கள் உண்மை என கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த குடிநீர் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.