திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கணவரை கொல்வதற்கு முன் மது ஊற்றி கொடுத்து மட்டன் சமைத்து பரிமாறிய மனைவி தன்னை புகழ்ந்து பேச வைத்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35), போலீஸ்காரர். இவரது மனைவி ஷிவானி(30). தம்பதிக்கு 8 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷின் நண்பரான டாக்சி டிரைவர் ராமாராவ்(33) என்பவருடன் ஷிவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது. இது ரமேஷிற்கு தெரிய வந்ததால் ஷிவானியை கண்டித்தார். கணவர் ரமேஷ் மூலம் தங்கள் தகாத உறவுக்கு தடை ஏற்படும் என்பதால் காதலனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய ஷிவானி திட்டமிட்டார்.
இதனால் அவரை கடந்த 1ம் தேதி அதிக மது ஊற்றி கொடுத்து பின்னர் காதலன் மற்றும் அவரது நண்பர் நீலா ஆகியோரை வரவழைத்து ஷிவானி தலையணையால் அமுக்கி கொலை செய்தார். மறுநாள் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஷிவானி நாடகமாடினார். இதுகுறித்து என்.வி.பி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து ஷிவானி, ராமாராவ் மற்றும் நீலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், தனது கணவரை கொலை செய்வதற்கு முன்பு ஷிவானி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது கணவருக்கு மட்டன் குழம்பு, மட்டன் தொக்கு ஆகியவற்றை சமைத்து ஷிவானி பரிமாறியுள்ளார். பின்னர் அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அப்போது தன்னை புகழ்ந்து பேசும்படி கூறி வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் போலீஸ்காரர் ரமேஷ் அதிக மதுபோதையில் பேசுகையில், ‘எனது மனைவி மிகவும் தெளிவானவள். போதிய படிப்பறிவு இல்லாவிட்டாலும் வழிகாட்டினால் போதும், சிறப்பாக செயல்படக்கூடியவள், என் மனைவியே எனது வாழ்கை. நான் இருக்கும் வரை தைரியமாக இருப்பாள். நான் இறந்தாலும் அவள் தைரியமாக இருக்க வேண்டும். என் மனைவிதான் பெஸ்ட்’ என ஷிவானி பேச வைத்துள்ளார். அதன்பின்னர் ரமேஷை படுக்கை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்துள்ளார். பிறகு கொலை நடந்திருக்கிறது.