மதுரை: முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்கக் கவசம் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் வசம் தங்கக்கவசம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை 2014ம் ஆண்டு அப்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வழங்கியிருந்தார். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30ம் தேதி தேவர் குருபூஜை விழாவில் தங்கக்கவசம் அணிவிக்கப்படும்.
இதனிடையே, அதிமுகவில் எழுந்த பிரச்சனை காரணமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு பசும்பொன் தேவர் தங்க கவசத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன் தேவர் தங்க கவசத்தை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்கக்கவசம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டது. மதுரை அண்ணாநகரில் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 13 கிலோ தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன் கிராமத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவர் குருபூஜை விழாவில் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள உள்ளது நினைவுகூரத்தக்கது.