முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அலையாத்திக்காடு உள்ளது. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். 12,020 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடு, தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது. புயல் மற்றும் சூறாவளி, சுனாமியில் இருந்து கடலோர கிராமங்களை பாதுகாக்கும் அரணாக அலையாத்தி காடுகள் விளங்குகின்றன.
முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு ஆற்றின் வழியே படகில் நெடுந்தூர பயணம் செல்வது சுற்றுலா பயணிகளின் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் படர்ந்து காணப்படும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு மெய்மறக்க வைக்கும். லகூன் பகுதியில் உள்ள குட்டி குட்டி தீவுகள் பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கும் ஒரு சொர்க்கபூமியாக அலையாத்தி காடுகள் உள்ளது. இதனால் இந்த அலையாத்தி காட்டுக்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அலையாத்தி காடுகள் பாதிக்காமல் தடுக்க, வனத்துறை மூலம் முத்துப்பேட்டை வன பகுதியில் அலையாத்திக்காடுகளை உருவாக்குவதற்கும், புனரமைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மீன் முள் வடிவில் காடு உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டத்தின்கீழ் முத்துப்பேட்டை துறைக்காட்டில் காலியாக இருந்த 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.30 லட்சம் செலவில் அலையாத்தி காடுகள் உருவாக்கும் பணி கடந்தாண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் 9 ஹெக்டேர் பரப்பளவில் “தமிழ் வாழ்க” எனும் சொற்களின் வடிவில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 555 மீட்டர் நீளம், 152 மீட்டர் உயரத்தில் ”தமிழ் வாழ்க” எனும் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் ஒவ்வொரு எழுத்தும் சராசரியாக 130 மீட்டர் உயரத்திலும், 65 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாய்க்காலும் 2 இன்ட் 1 இன்ட் 1 மீட்டர் எனும் அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. “தமிழ் வாழ்க” எனும் வடிவமைப்பின் மொத்த வாய்க்கால்களின் நீளம் 3962 மீட்டராகும். அருகில் உள்ள வாய்க்கால்களில் இருந்து முறையாக தண்ணீர் வரும் அளவுக்கு, இந்த எழுத்து வடிவ வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த எழுத்துக்களுடன் கொண்ட வாய்க்கால் கரைகளில் அவிசெனியா மெரினா எனப்படும் கருங்கண்டல் வகையான அலையாத்தி செடிகள் நடப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் அலையாத்திக்காடுகள் உருவாகி வரும்போது அதில் உள்ள இந்த “தமிழ் வாழ்க” எனும் எழுத்து மிகவும் தனித்துவமாக தெரியும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த “தமிழ் வாழ்க” எனும் தனித்துவமான வாய்க்கால் வடிவமைப்பு தமிழ் ஆர்வலர்கள், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.