*களத்தில் இறங்கி ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு கட்டுமானங்களுக்கு தேவையான கருங்கல் ஜல்லி, எம்.சாண்ட், பி.சா ண்ட் போன்ற கட்டுமான பொருட்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது.இந்நிலையில், கட்டுமான பொருட்களின் விலை கடந்த 2மாதங்களில் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்த பணிகளை முடிக்க முடியாமல் ஒப்பந்ததாரர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே விலை உயர்வை கைவிடக்கூறி ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சில தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் கோரிக்கை கொடுத்தனர். மேலும், தங்கள் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை சிறைப்பிடிப்போம் என்றனர்.
அதன்படி முத்துப்பே ட்டை பகுதிக்கு அரவை கருங்கல் ஜல்லிக்கற்கள் மற்றும் எம்.சாண்ட், பி சாண்ட் லோடு ஏற்றி கொண்டு வந்த டாரஸ் லாரிகளை கோவிலூர் பைபாஸ் அருகே நாகப்ப ட்டினம் தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் ஒப்பந்த காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்காலிகமாக விடுவிப்பதாக கூறி ஒப்பந்ததாரர் லாரிகளை விடுவித்தனர்.