Tuesday, December 5, 2023
Home » கட்சி நிர்வாகிகள், ரவுடி கும்பல்களின் தலைவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் ரூட் தலையாக தொடங்கி கூலிப்படை தலைவனாக மாறிய முத்து சரவணன்: பரபரப்பான பகீர் தகவல்கள் அம்பலம்

கட்சி நிர்வாகிகள், ரவுடி கும்பல்களின் தலைவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் ரூட் தலையாக தொடங்கி கூலிப்படை தலைவனாக மாறிய முத்து சரவணன்: பரபரப்பான பகீர் தகவல்கள் அம்பலம்

by Ranjith

சென்னை: அரசியல் கட்சி நிர்வாகிகள், ரவுடி கும்பல்களின் தலைவர்களை தீர்த்துக் கட்டி சென்னையில் தாதாவாக வலம் வர போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திட்டம் தீட்டியிருந்த தகவல் தெரிந்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், ரூட் தலையாக தனது பயணத்தை தொடங்கிய முத்து சரவணன், கூலிப்படை தலைவனாக வலம் வந்ததும் தெரியவந்துள்ளது. சென்னை சோழவரம் அருகே கூலிப்படை தலைவன் முத்து சரவணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் ரவுடிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி சரவணன், அதிமுக பிரமுகர் பன்னீர்செல்வத்தை கொலை செய்த பிறகு தலைமறைவாக இருந்தான். இவன் ஏற்கனவே மடிப்பாக்கத்தில் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கில் தொடர்புடையவன். இவன், போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கூட்டாளி சண்டே சதீஷூடன் சுட்டுக் கொல்லப்பட்டான். தற்போது, முத்து சரவணன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. முத்து சரவணனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. சிறு வயதிலேயே சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் குடியேறினான். பச்சையப்பன் கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி படித்து வந்தான்.

அப்போது பஸ்சில் தொங்கிச்செல்வது, மற்ற கல்லூரி மாணவர்களுடன் சண்டை போடுவது என்று ஆரம்பித்தவன், பின்னர் ரூட் தலையாக மாறினான். அதில் ஒரு பஸ்சை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றான். சிறையில் ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோட்டைச்சாமிக்கும், முத்து சரவணனுக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் கோட்டைச்சாமி, தனது உறவினர்களுடன் சேர்ந்து முத்து சரவணனை அடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தில் கோட்டைச்சாமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்தான்.

சிறையில் இருந்து வெளியில் வந்ததும், கொலை வழக்கின் செலவுக்காக ரவுடிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி வழக்குகளில் ஈடுபட்டான். அப்போதுதான் எண்ணூர் தனசேகரன், சேரா ஆகிய ரவுடிகளுடன் மோதல் ஏற்பட்டது. அதில் சேராவின் மகன் கதிர் கூட்டாளிகளுக்கும், முத்து சரவணனுக்கும் மோதல் உருவானது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய தொடங்கினர். அதில், இரு தரப்பினரும் மாறி மாறி கொலை செய்ததில், முத்து சரவணன் 3 கொலைகளை செய்தான். முதல் 2 கொலைகளில்தான் அவன் நேரடியாக ஈடுபட்டான். பின்னர் ரவுடிகளின் தலைவனாக உருவெடுத்ததால், திட்டம் போட்டுக் கொடுத்து, அனுப்பி வைப்பதோடு நின்று விடுவான். இதனால் அவன் எண்ணூர் தனசேகரன், கதிர் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தான்.

ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் முத்துசரவணன், கதிர் என இரண்டு ரவுடி கும்பல்களையும் சேர்த்து வைப்பதாக கூறிய வக்கீலையும் படுகொலை செய்தான். இதனால் புறநகர் பகுதிகளில் இவன் கூலிப்படை கும்பலின் தலைவனாக உருவெடுத்தான். திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வத்தை கூலிப்படையாக செயல்பட்டு படுகொலை செய்தான். ரெட்ஹில்ஸ் பகுதியில் ஒரு தொழிலதிபரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டினான். ஆனால் அந்த தொழிலதிபர், அதிமுக பிரமுகர் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து கொண்டு எண்ணூர் தனசேகரனை சந்தித்தார்.

இதனால் எண்ணூர் தனசேகரன், அவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான். இதனால் பணத்தை கொடுக்காததால் ஆத்திரத்தில் பன்னீர்செல்வத்தை கொலை செய்தான். இவனுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தவன்தான் சண்டே சதீஷ். பக்கத்து வீட்டுக்காரர் கோட்டைச்சாமி கொலை வழக்கை தவிர மற்ற 6 கொலையிலும் முத்துசரவணனுடன் சண்டே சதீஷூம் ஈடுபட்டுள்ளான். கொலை வழக்குகளை சந்திக்க பணம் தேவைப்படுவதால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்தான்.

மேலும் பல கொலை மிரட்டல், வழிப்பறி போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தான். போதைப் பொருள் வியாபாரத்திலும் கடந்த சில நாட்களாக ஈடுபட தொடங்கினான். அதிலும் பணம் கொட்டியது. இதனால் ரெட்ஹில்ஸ் பகுதியில் அசைக்க முடியாத ரவுடியாக வலம் வந்தான். இதனால் போலீசுக்கும் சவால் விட்டு கொலைகளில் ஈடுபட்டு வந்தான். போலீசுக்கும், பொது மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்த ரவுடி முத்து சரவணன் என்கவுன்டர் செய்யப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பெரும் சந்தோசத்தில் உள்ளனர்.

அதோடு முத்து சரவணனுக்கு 20க்கும் மேற்பட்ட அடியாட்கள் உள்ளனர். தற்போது அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் முத்துசரவணனின் கூட்டாளிகளை கூண்டோடு கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?