சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜி-20 மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துக்கான அழைப்பை இந்திய குடியரசு தலைவர் அனுப்பி இருக்கிறார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த அழைப்பிதழில், ‘பாரத குடியரசு தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்தியா’ என்ற தாய்நாட்டின் பெயரை உச்சரிக்க கூட ஒன்றிய அரசு அஞ்சுகிறது. இந்தியில் எழுதப்படும் பெயர்களை மொழி பெயர்க்கும் போது, அந்தந்த மொழிச் சொற்களில் மொழி மாற்றம் செய்வதற்கு பதிலாக, இந்தி சொற்களை அப்படியே எழுத வேண்டும் என்று அரசு நிர்ப்பந்திக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் மட்டுமல்லாது சட்டங்களின் பெயர்களையும் கூட இந்தியிலேயே எழுதும் முறை திணிக்கப்படுகிறது. இந்தி மொழி அறியாத இந்திய மக்களை, அந்நியப்படுத்தும் ஒன்றிய அரசின் பொருத்தமற்ற அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்.