பழநி: பழநியில் நாளை மறுதினம் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் நேற்று ஆய்வு செய்தார். தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது, திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயில் உள்ள பழநியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரும் 24 மற்றும் 25ம் தேதி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறும் இம்மாநாட்டின் ஏற்பாடுகள் அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இம்மாநாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 இடங்களில் உணவு வழங்கப்பட உள்ளது. ரூ.12.84 கோடியில் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 8 இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, ஆய்வரங்கங்கள், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் போன்றவை நடைபெறுகிறது. 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மாநாட்டில் 5 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 39 வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளன. மாநாட்டில் விழா மலர் மற்றும் ஆய்வுக்கட்டுரை மலர் என 2 மலர்கள் வெளியிடப்பட உள்ளன. முருகனின் பெருமையை விளக்கும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள், கும்மி ஆட்டம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இதற்காக மலை போன்ற அரங்கம் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியை நேற்று பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், டிஎஸ்பி தனஞ்ஜெயன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாநாடு விபரமறிய டயல் பண்ணுங்க…!
மாநாட்டிற்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் மற்றும் மாநாட்டினை காண வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விவரங்கள், ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை அறிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண் 1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.