சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலட்சினையை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று வெளியிட்டார். குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (29.07.2024) ஆணையர் அலுவலகத்தில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) வெளியிட்டார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதலமைச்சர் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்ட முடிவுகளின்படி பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதற்காக என் தலைமையில் 20 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும், ஆணையர் தலைமையில் 11 செயற்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாநாடு தொடர்பாக ஆதீன பெருமக்கள், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் 10 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், நானும் பழனிக்கு சென்று 2 ஆய்வு கூட்டங்கள் நடத்தியதோடு, கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இம்மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 36 ஆய்வுக் கட்டுரைகள் உள்பட 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய 15 நபர்களுக்கு முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. இம்மாநாட்டிற்காக திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களில் தங்கும் அறைகள், 3 இடங்களில் உணவருந்தும் கூடங்கள், 10 இடங்களில் உணவு வழங்கிட ஏற்பாடுகள் என சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 நுழைவுவாயில்களுடன் 1,000 வாகனங்கள் நிறுத்தும் வசதியும், 100 இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
இம்மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளிலிருந்து துணை அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். அறுபடை வீடுகளின் அரங்குகள், புகைப்பட கண்காட்சி, வேல்கோட்டம், 3D நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் போன்ற அம்சங்களுடன் ஆன்மிக வரலாற்றில் தமிழ்க் கடவுளாம் முருகனுக்கு சிறப்பு சேர்க்கின்ற மாநாடாக, இந்த ஆட்சிக்கு ஒரு மைல்கல்லாக அமையும்.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ், அமெரிக்கா, லண்டன், ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா போன்ற 12 நாடுகளிலிருந்து மாநாட்டில் கலந்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதி கட்டணமில்லாமல் செய்து தருவதுடன், விரும்பும் திருக்கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திட ஏதுவாக செயல் அலுவலர்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்றபின் முதலமைச்சர் தலைமையில் ஆன்மிக பெருமக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், சான்றோர்கள் மற்றும் அலுவலர்களை கொண்ட இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு, இரண்டு முறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அக்கூட்டத்தில்தான் இம்மாநாடு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. தமிழுக்கும், தமிழ்க் கடவுளான முருகனுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஆன்மிகத்தில் இந்த அரசிற்கு எந்த தடையும் இல்லை, தமிழை முன்னெடுக்கும் ஆட்சி என்ற இரண்டு பொருட்களை இம்மாநாடு நிறைவு செய்கிறது. முதலமைச்சர் மேற்பார்வையில், அவரது உத்தரவின்படி அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டிற்கு அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படுவதோடு, உபயதாரர்கள் பங்களிப்பு மற்றும் பழனி திருக்கோயில் நிதி ஆகியவற்றை வெளிப்படைத் தன்மையோடு அறிவிப்போம்.
இம்மாநாட்டையொட்டி பழனிக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதற்கு முதலமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார். பழனியையொட்டியுள்ள பிற மாவட்டங்களிலிருந்து கோரிக்கை வரப்பெற்றால் தேவையின் அடிப்படையில் அதுகுறித்து பரிசீலிக்கப்படும். இந்த அரசு பொறுப்பேற்றபின், 1,921 திருக்கோயில்களில் இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, இந்தாண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். மாநில வல்லுநர் குழுவால் 9,327 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி,ரூ.5,320.55 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், 17,000 திருக்கோயில்களில் ஒருகால பூசைத் திட்டம்.
ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஆணையர் அலுவலக கூடுதல் கட்டடம், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் என பல்வேறு முனைப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் இதுவரை இந்து சமய அறநிலையத்துறையின் 74 நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார். துறையின் அமைச்சர் என்ற முறையில் நான் 352 நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு பல்வேறு களஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளேன். ஆகவே, இந்த ஆட்சியை எப்படி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்று கூற முடியும். ஆன்மிக ஆட்சிக்கு உதாரணமாக திகழும் பொற்கால ஆட்சியாக முதலமைச்சர் ஆட்சி திகழ்கிறது என்று அனைவரும் கூறுகின்ற நிலை நிச்சயம் ஏற்படும்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், ஓருங்கிணைப்பு குழு உறுப்பினர் தேசமங்கையர்க்கரசி, கூடுதல் ஆணையர்கள் இரா. சுகுமார், இ.ஆ.ப., சி.ஹரிப்ரியா,மா.கவிதா, இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.