சென்னை: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கின்றனர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கின்றனர். சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டீர்களே என்ற ஆதங்கத்தில்தான் நான் அந்த கருத்தை சொன்னேன்.
இலங்கையில் தமிழ் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸுக்கு துணை போகிறீர்களே என்ற ஆதங்கம் என்று தெரிவித்தார். எனக்கு ஓட்டு சதவிகிதம் முக்கியமல்ல. ஓட்டுக்காக வந்தவனல்ல நான், நாட்டுக்காக வந்தவன். அநீதிக்கு எதிராக இருக்கும் இஸ்லாம் மார்க்கத்திலும், கிறிஸ்துவ சமயத்திலும் இருந்துகொண்டு, அநீதிக்கு ஆதரவாக நிற்பவர்களைத்தான் குறிப்பிட்டேன் என்று சீமான் குறிப்பிட்டார்.
மதம் அடிப்படையில் மனிதர்களை கணக்கிடுவதா?: சீமான்
மதத்தின் அடிப்படையில் மனிதர்களை கணக்கிடுவதே தவறு சீமான் தெரிவித்துள்ளார். மதம் என்பது மாறக்கூடியது; அதை வைத்து எப்படி மனிதரை கணக்கிட முடியும்? என்று கேள்வி எழுப்பினார். நேற்று இந்துவாக இருந்தவர் இன்று இஸ்லாமியராக மாற முடியும்; அதை வைத்து கணக்கிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மதம் சார்ந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எண்ணிக்கையை எதிர்க்கிறேன். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எல்லாருக்கும் எல்லாமே கிடைத்தால் சாதி ஒழிக்கப்படும் என தெரிவித்தார்.