சென்னை: இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சிறுபான்மை என்று அழைப்பவர்களை செருப்பை கழட்டி அடிப்பேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையான பேச்சுகளுக்கு பெயர் போனவர். அவர் திடீரென இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறித்து பேசி வருவது தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக சீமானின் பேச்சு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இடையே கடுமையான எதிர்ப்புகளை உண்டாக்கி வருகிறது.
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், ‘இங்கு இருக்க்கூடிய கிறிஸ்தவர்கள் நமக்கு வாக்களிக்கப்ப போவதில்லை. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது’ என்று கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கியுள்ளார். அவரது இதுமாதிரியான பேச்சுக்கள் இரு மதத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று தீரன் சின்னமலை சிலைக்கு சீமான் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ளேன் என்று கூறியது யார்? நான் என்றும் ஓட்டுக்காக அரசியல் செய்யவில்லை நாட்டுக்காக தான் அரசியல் செய்கிறேன். என்னோடு நிற்கும் இஸ்லாமியர்கள் என்னோடு எப்போதும் இருப்பார்கள், எனக்கு கிடைக்கும் ஓட்டு எப்போதும் கிடைக்கும். பைபிள், குரானில் கூறியுள்ளதைப் போன்று இன்று தேவனின் ஆட்சி முறையா இங்கு நடக்கிறது? எல்லாம் சாத்தானின் ஆட்சி முறையாக தான் இருக்கிறது. இதற்கு துணை செல்பவர்கள் யார்? இதைத் தான் குறிப்பிட்டு பேசினேன்.
இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டுமே அநீதிக்கு எதிராக பிறந்த மதங்கள். இங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்காமல் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்?. ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருந்தாலும் ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் இருப்பதற்கு காரணம் மொழி வாரியாக தேசிய இனங்களும், நிலங்களும் இருப்பது தான் காரணம். இங்கு இருக்கும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன் போனவன் எல்லாரும் சிறுபான்மையினர் சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பை கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கிறேன். மதத்தை வைத்து மனிதனை பிரிப்பதை ஏற்க முடியாது. எம்ஜிஆர் இந்த நாட்டில் பெரும்பான்மையா சிறுபான்மையா? ஆனால் அவர் இங்குள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியரை எல்லாம் சிறுபான்மை என்றார். மதத்தை வைத்து எப்படி பேசுவீர்கள்? இந்துவாக இருக்கும் நான் நாளை இஸ்லாமியராக மாறுவேன். இஸ்லாமியராக இருக்கும் நான் கிறிஸ்தவனாக மாறுவேன். ஆனால், தமிழனாக இருக்கும் நான் போஜ்புரி, பீகாரியாக மாற முடியுமா?. இவ்வாறு அவர் கூறினார்.