சென்னை: கவிதைகளை மட்டுமல்ல; எண்ணற்ற சினிமா பாடல்களை கலைஞர் எழுதியுள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலை. வேந்தரான முதலமைச்சர் ஸ்டாலின் பட்டங்களை வழங்கினார். பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
முதல்வரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இது:
இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது. தமிழ்நாட்டில் முதலமைச்சரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இது. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியுதவியோடு செயல்படும் பல்கலை.யாக இந்த பல்கலைக்கழகம் உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு:
இசை, கவின் கலைப் பல்கலை.யின் வேந்தராக முதல்வரே செயல்படுவார் என 2012ல் ஜெயலலிதா அறிவித்தார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு தன்னையே வேந்தராக நியமித்துக் கொண்டதை தற்போது மனதார பாராட்டுகிறேன். மற்றவர்கள் பல்கலை. வேந்தராக இருந்தால் நோக்கம் சிதைந்துவிடும். நான் அரசியல் பேசவில்லை; எதார்த்தத்தை தான் பேசுகிறேன் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
பல்கலை. வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும்:
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நீதிபதிகள் கருத்துகளை கூறியுள்ளனர். முதல்வரே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் சிறப்பாக நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்தார்.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்:
கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்; அதற்கு எந்த தடையும் இருக்க கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் எல்லோருக்கும் கல்வி கிடைப்பதில் தடை இருக்காது. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தால் அனைவருக்கும் கல்வி சாத்தியமாகும் என்று கூறினார்.
இசையோடு இணைந்தது எங்கள் குடும்பம்:
கவிதைகளை மட்டுமல்ல; எண்ணற்ற சினிமா பாடல்களை கலைஞர் எழுதியுள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இசைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. எனது தாத்தா பாட்டு பாடுவதில் வல்லவர். கலைஞர் பாட்டு பாடியதில்லையே தவிர எல்லா இசை நுணுக்கங்களும் அவருக்கு தெரியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பி.சுசீலாவின் பாடலை பாடிய முதல்வர் ஸ்டாலின்:
‘நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை’ என்ற பி.சுசீலாவின் பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பாடினார். பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியதில் அந்த பட்டமும் பெருமை பெறுகிறது. காரில் செல்லும்போது பி.சுசீலாவின் பாடல்களை கேட்பேன்; சுசீலாவின் குரல் எனக்குப் பிடிக்கும் என்று முதலமைச்சர் கூறினார்.
பல்கலை.க்கான அரசு மானியம் ரூ.3 கோடியாக உயர்வு:
பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி அடுத்த நிதியாண்டில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சி மையம், நூலகம் அமைக்க ரூ.1 கோடி:
ஜெயலலிதா இசை பல்கலைக்கழக அரசு மானியத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி அடுத்த நிதியாண்டில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என்றார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பல்கலைக்கழக வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
சட்டப் போராட்டத்தில் நல்ல செய்தி வரும்: முதல்வர்
இதனால்தான் அனைத்து பல்கலை.யிலும் முதல்வரே வேந்தராக இருக்க சட்டப்போராட்டம் நடத்துகிறோம். நமது சட்டப் போராட்டத்தில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம் என்று விழாவில் முதலமைச்சர் பேசினார்.