சென்னிமலை: சென்னிமலை முருகன் கோயில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கிறிஸ்தவ முன்னணி மாநில தலைவர் சரவணனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் 17ம் தேதி கிறிஸ்தவ போதகரான அர்ஜுனன் என்ற ஜான் பீட்டர், தனது வீட்டில் கிறிஸ்தவ வழிபாடு நடத்தி கொண்டிருந்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும், ஜான் பீட்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தங்களது குடும்பத்தினரை அவர்கள் தாக்கியதாக சென்னிமலை போலீசில் ஜான் பீட்டர் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஜான் பீட்டரை தாக்கிய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் 25ம் தேதி சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன் கிறிஸ்தவ முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மாநில தலைவர் சரவணன், சென்னிமலை முருகன் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து முன்னணி ஈரோடு மாவட்ட செயலாளர் முரளி புகாரின்பேரில், செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவரான சரவணன் (36), திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பாதிரியார் ஸ்டீபன் (40) ஆகிய இருவர் மீதும் மதத்தை அவமதித்தல், மத கலவரத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.