அம்பத்தூர்: இந்துக்கள் அனைவரும் ஓரணியில் நின்று ஒற்றுமையாக வாக்களிக்கவேண்டும் என கூறும்போது அது எப்படி முருக பக்தர்கள் மாநாடாக அமையும். அரசியல் மாநாடுதான் என்பது வெளிப்படையான ஒன்று என கொரட்டூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னை கொரட்டூரில், ”அறிவை உயர்த்தும் சொற்போர்! காற்போர் விரும்பும் நற்போர்” என்ற தலைப்பில் கலைஞரின் பிறந்த நாள் பட்டிமன்ற பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.
இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் பகுதி செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரபல பட்டிமன்ற நடுவர் ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம், அண்ணா, பெரியார் குறித்து பேசப்பட்ட அவதூறுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேசமயம் அடிபணிந்து போவது அவர்களது வாடிக்கை என்பதால் இந்த விவகாரத்தில் பாஜகவிடம் அடிபணிந்து போயுள்ளனர்.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டை அனைத்து ஊடகங்களும் நேரடியாக ஒளிபரப்பு செய்தன, அனைவரும் அதை பார்த்தனர். இந்து சமய அறநிலையத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேடையிலேயே திராவிடத்தின் தொடர்ச்சியை ஒழிப்போம் என சொல்லி இருக்கிறார்கள். இந்துக்கள் அனைவரும் ஓரணியில் நின்று ஒற்றுமையாக வாக்களிக்கவேண்டும் என கூறும்போது அது எப்படி முருக பக்தர்கள் மாநாடாக அமையும். இது அரசியல் மாநாடுதான் என்பது வெளிப்படையான ஒன்று. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.