சென்னை: அயனாவரம் காசி விஸ்வநாதர் கோயிலில் ரூ.97 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை, அயனாவரம், காசி விஸ்வநாதர் கோயிலில் பொதுநல நிதி மற்றும் கோயில் நிதி மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். மதுரையில் முருகன் பெயரில் அவர்கள் நடத்துகின்ற மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு. நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள் அறம் சார்ந்த பணிகள், பக்தர்களுக்கு தேவையான பணிகள், ஆன்மிகப் பணிகள். ஆகவே இறைவன் இரண்டையும் பகுத்துப் பார்க்கின்ற ஆற்றல் பெற்றவர்.
நிச்சயமாக இது போன்ற போலியான நடவடிக்கைகளுக்கு இறைவன் எந்நாளும் துணை இருக்க மாட்டார். முருக பக்தர்கள் மாத்திரமல்ல ஆன்மிகம் சார்ந்த இறை அன்பர்கள் அனைவருமே மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது. மேலும், முதல்வர் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.1,060 கோடியை அரசு நிதியாக வழங்கியிருக்கின்றார். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் செல்வம், மாநகராட்சி மன்ற உறுப்பினர் வாசு, பரம்பரை அறங்காவலர் சுப்பராய் தவே மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.