மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி சார்பில் கடந்த ஜூன் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு அனுமதி தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, ‘‘மதவெறியைத் தூண்டும் அரசியல் உரைகள் கூடாது. இதனை முன்கூட்டியே காவல்துறை உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மாநாட்டில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், மாநாட்டில் இந்துக்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு ஓட்டு போடக் கூடாது, மதவெறியைத் தூண்டும், அதிர்ச்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.மேலும் மாநாட்டில் தலைவர்கள் பேச்சு, இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ மக்களிடையே மதவெறியைத் தூண்டி வெறுப்பையும், வன்முறையை விதைப்பதாகவும் இருந்தது. இதுதொடர்பாக மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் வக்கீல் வாஞ்சிநாதன், புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, மதுரை அண்ணாநகர் போலீசார், பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மதம், இனம் குறித்து பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.