சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: இதயம் மற்றும் மூட்டு பிரச்னை காரணமாக ஜி.கே.மணி சிகிச்சை பெற்று வருகிறார். நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே நடந்துள்ளது.
பாமகவின் கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. மதுரை முருகர் மாநாடு நடத்துவதற்கு பாஜவுக்கு என்ன தகுதி உள்ளது. அயோத்தியில் ராமர், ராமர் என கூறினார்கள். அயோத்தி அரசியலில் பாஜவை ராமர் கைவிட்டு விட்டார். அதேபோல் முருகர் தமிழகத்தில் பாஜவை கைவிட்டு விடுவார் என்றார். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மாநிலத் துணைத் தலைவர் விஜயன் ஆகியோர் உடனிருந்தனர்.