பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், ஆர்டி.சேகர் எம்எல்ஏ, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதி மற்றும் திமுக அரசின் நிதி என ஒரு குடும்பத்துக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், துணிமணிகள் வழங்கினர். இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று உதவிகளை திமுக நிர்வாகிகள் செய்தனர். சட்டமன்ற உறுப்பினர் சார்பாக உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இன்றைக்கு 8 ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி, வேட்டி, புடவை வழங்கப்பட்டுள்ளது.
திமுக சார்பாக 42 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 26 கிலோ அரிசி, உடைகள் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடம் என்பது தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்புக்கு சொந்தமானது. அங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர். 400 குடும்பங்களுக்கும் நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார். இவ்வாறு கூறினார். தமிழக வெற்றிக்கழக நிர்வாகி தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, ‘’இந்த விவகாரத்தில் உண்மை இருப்பின் முதலமைச்சர் இன்னார் இனியவர் என்று பார்க்க மாட்டார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்’’ என்று அமைச்சர் கூறினார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பான தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்கிறார்களே? ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு பச்சை பொய் பழனிசாமி என பெயர் வைத்துள்ளோம். அவர் வாயில் வந்ததை எல்லாம் சொல்கிறார்.
என்னதான் நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அரசு போதிய ஒத்துழைப்பு அளித்ததால்தான் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. எஸ்ஐடி என்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைதான். முறையாக விசாரணை செய்தனர். அரசு வழக்கறிஞரும் சேர்ந்து ஐந்தாண்டு இழுத்தடிக்கப்பட்ட பொள்ளாச்சி சம்பவம் போன்று இல்லாமல் ஐந்து மாதங்களில் தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்பது மீண்டும் நிரூணமாகியுள்ளது. முதலமைச்சரை பாராட்ட மனமில்லை என்றாலும் வசைபாடுவதை தவிர்த்தால் குற்றச்சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஊக்கமாக இருக்கும்.
பாஜகவின் முருகர் பக்தர்கள் மாநாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு என்பது 27 அண்டை நாடுகளில் இருந்து முருக பக்தர்கள் பங்கேற்ற மாநாடு. யாரும் கூவி, கூவி அழைக்கவில்லை, யாரும் இரண்டு மாதமாக சங்கிகளை வைத்து நடத்தவில்லை. தமிழகத்தில் எப்போது கலவரத்தை உண்டாக்கலாம் என்று காத்திருக்கும் நபர்கள் அருகில் உட்கார்ந்து தமிழக பாஜக தலைவர் இந்த பேட்டியை கொடுக்கிறார். பாஜகவின் இந்த மாநாடு என்பது மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்த முயற்சி என்று முருக பக்தர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இந்த மாநாடு சங்கிகள் நடத்தும் மாநாடு. இவ்வாறு அமைச்சர் கூறினார்.