பெரம்பூர்: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அவர், கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலை, ராஜா தோட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுவரும் புதிய குடியிருப்புகளின் இறுதிக்கட்ட பணிகள் பார்வையிட்டார். கொளத்தூர் பெரியார் நகர், ஜவகர் நகர் பொது நூலகத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் ‘முதல்வர் படைப்பகம்’’ உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.
இதன்பின்னர் நிருபர்களிடம் சேகர்பாபு கூறியதாவது;
ஜவகர் நகர் நூலகத்தை புதுப்பித்து புதிதாக கட்டப்பட்டுவரும் முதல்வர் படைப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். முதல்வர் படைப்பகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 9 இடங்களில் முதல்வர் படைப்பகங்களை கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம். ராயபுரம், ஆர்கே.நகர், பெரம்பூர், திருவிக. நகர், எழும்பூர், வில்லிவாக்கம் பகுதிகளில் 9 முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட உள்ளது. இந்தமாத இறுதிக்குள் இதற்கான பணியை தொடங்கி வைப்போம். இந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
தென் சென்னையிலும் 6 இடங்களில் முதல்வர் படைப்பகம் கொண்டு வர திட்டமிடப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகத்தில் பயின்றுவந்த 6 பேர், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். முதல்வர் படைப்பகம் மூலம் சென்னை கல்வியில் சிறந்த நிலையை அடையும். கல்வியும் பொருளாதாரமும் உயர்ந்தாலே வன்முறை, ஏற்றத்தாழ்வு இருக்காது.
பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? யோகி ஆதித்யநாத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுபடுத்தும் முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறோம். 117 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பழனியில் ரம்யமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கடவுள் முருகனுக்கு சிறப்பு செய்யும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
ஏற்கனவே பாஜகவினர் வேலை கையில் எடுத்துக்கொண்டு சுற்றினார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு கிடைத்தது பூஜ்ஜியம்தான். முதலமைச்சர் பக்கத்தில் தான் முருகன் இருக்கிறார். திருப்பரங்குன்றத்துக்கு சென்றபோது மாநாட்டுக்கான நோட்டீஸ் கொடுத்தார்கள். முருகன் படம் அதில் இருந்ததால் நான் பெற்றுக் கொண்டேன். ஏடிஎம் குடிநீர் வடசென்னை பகுதியில் சரியாக செயல்படவில்லை என்ற கேள்விக்கு, ‘’புதுதிட்டம் தொடங்கும் போது சிறு, சிறு குறைகள் இருக்கும். அது சரி செய்யப்படும். தற்பொழுது அந்த 4 குடிநீர் ஏடிஎம்களும் செயல்படுகிறது’ என்றார்.
அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே?
அம்மா குடிநீரை அவர்கள் எந்த இடத்தில் தொடங்கி அதை நாங்கள் எடுத்து விட்டோம் என்று அவர்கள் சுட்டிக் காட்டினால் நாங்கள் பதில் சொல்கிறோம். இந்த கூட்டணி உறுதிமிக்க கப்பல். இந்த கப்பலின் மாலுமியான முதலமைச்சர், புயல், பூகம்பங்களை எல்லாம் சந்தித்து கப்பலை செலுத்தி வருகிறார். 2026ம் ஆண்டு கடல்முரணாக இருந்தாலும் அரணாக மாற்றி இந்த ஆட்சியை தொடர்வோம். இவ்வாறு கூறினார்.