‘‘அரசு தரப்பில் நிதி ஒதுக்கி கொடுத்தாலும் பெண் அதிகாரியின் ஆட்டத்தால் ெபாதுப்பணித்துறை கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்ட பொதுப்பணித்துறையின் மூலம் நடக்கும் சில கட்டுமான பணிகள் தொய்வு நிலையிலேயே இருக்குதாம்.. அரசு தரப்பில் நிதியெல்லாம் ஒதுக்கி கொடுத்தாலும், அதிகாரிகள் தங்கள் கைக்குள் பிடித்து வைத்துக்கொண்டு, தங்களுக்கான ‘ப’ வைட்டமின்களை எதிர்பார்த்து காத்திருக்காங்களாம்.. அதிலும் குறிப்பாக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் இருக்கும் பெண் அதிகாரியின் ஆட்டம் ரொம்பவே ஓவராக இருக்காம்.. இந்த தகவல் எல்லாம் தற்போது விஜிலென்ஸ் கவனத்திற்கும் போயிருக்கிறதாம்.. கடந்த ஆட்சி காலத்தில் கல்லா கட்டியவர்கள்தான், தற்போதும் உச்சத்தை தொட முயற்சித்திருக்காங்களாம்.. விரைவில் அவர்கள் சிக்குவார்கள் என அங்கிருக்கும் ஊழியர்களே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கர் கட்சிக்காரங்க கூண்டோடு இணைய வர்றாங்கன்னு மாஜியானவர் விடுத்த அழைப்பை ஏற்றுப்போன இலைக்கட்சி தொண்டர்கள் ரொம்பவே ஏமாந்து போயிட்டாங்களாமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் குக்கர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அதற்கு முழுக்கு போட்டு விட்டு இலை கட்சியில் போய் கூண்டோடு இணையப் போறாங்க.. எனவே இந்த இணைப்பு விழாவில் இலை கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என மாஜி அமைச்சர் மணியானவர் அழைப்பு விடுத்தாராம்.. இதை கேட்டு இலை கட்சியினரும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றாங்களாம்.. கூண்டோடு என்றவுடன் புலிக்கூண்டு போல் மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கும் என நினைத்து வந்த தொண்டர்கள் ரொம்பவே ஏமாற்றம் அடைந்து போனாங்களாம்.. புலிக்கூண்டு என நினைத்து வந்த தொண்டர்களை புறாக் கூண்டு நிகழ்ச்சியாக மாற்றி மாஜி அமைச்சர் மணியானவர் ஏமாற்றி விட்டாரே என்று புலம்பிக்கொண்டே சென்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மீன் ஏலம் கொடிகட்டி பறக்க, மறுபுறம் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு ப விட்டமின்களை கோடிக்கணக்கில் சுருட்டுறாங்களாமே எங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக 500க்கும் மேற்பட்ட ஏரிகள் இருக்கிறதாம்.. அவற்றில் பிரதான ஏரிகளில் மீன் மகசூலை சட்டத்திற்கு புறம்பாக சிலர் ஏலம் விட்டு அரசு பணத்தை சுருட்டி செல்கிறார்களாம்.. தற்போது புதுசா பனமலை ஏரியில் மீன் மகசூலை சட்ட விரோதமாக ஏலம் விட்டு 6 கோடி வரை ப விட்டமீன்களை தனிப்பட்ட நபர்கள் மூலம் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருட்டி சென்று இருக்கிறார்களாம்.. இதுதொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேல்மட்டம் வரையிலும் 147 புகார்கள் குவிந்திருக்கிறதாம்.. மாவட்ட அதிகாரிக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருக்க தற்போது வரையிலும் சிறிய விசாரணைகூட நடக்காதது பலருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காம்.. மாவட்ட அதிகாரியே சைலன்ட் மோடில் இருப்பதால் மீன் ஏலத்தில் மெகா ஊழல் நடத்திருப்பது உண்மைதானோ என்ற முணுமுணுப்பு மாவட்டத்தில் பரவலாக எழுந்துள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மிரட்டி, உருட்டி பணிய வைத்தாலும் முருகன் மாநாட்டு புகைச்சலால் மீண்டும் கூட்டணி தேவைதானா என இலைக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விவாதிக்கத் தொடங்கிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மம்மி மறைவுக்கு பிறகு இலை கட்சியும், மலராத கட்சியும் இணைந்து ஒன்றாக 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தன. இப்படி 5 தேர்தல்களிலும் தோல்வி தான் மிஞ்சியது.. அது மட்டுமல்லாது கூட்டணி வரை கெஞ்சிய மலராத கட்சியினர் இலை கட்சியுடன் கூட்டணிக்கு பிறகு அவர்களையே வசை பாடினாங்க.. குறிப்பாக இலை கட்சியின் ஆல் இன் ஆல் ஆக இருந்த சேலம் காரரையும் அப்போதைய மலராத கட்சியின் மலையான மாநில தலைவர் கடுமையாக விமர்ச்சித்தார். இதனால் தான் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக இலை கட்சியின் சேலம்காரர் மலராத கட்சியின் கூட்டணியை முறித்தார்.. தற்ேபாது சேலம்காரரை மிரட்டி, உருட்டி தலைநகருக்கு அழைத்துச் சென்று பணிய வைத்தாலும், இலை கட்சியும் – மலராத கட்சியும் முட்டல் மோதலுடன் தான் பயணித்து வருகின்றன.. அதுவும் தூங்கா நகரத்தின் முருகன் மாநாட்டிற்கு அழைத்ததால் பங்கேற்ற இலை கட்சியின் சீனியர்களை மேடையில் வைத்துக் கொண்டு திராவிட இயக்க தலைவர்களை மலராத கட்சி விமர்சனம் செய்தது இலை கட்சியினரை ரொம்பவே உசுப்பேற்றி இருக்காம்.. ஏற்கனவே தேசிய கட்சியின் கூட்டணியால் துவண்டு போயுள்ள அல்வா, முத்து மாவட்ட தொண்டர்கள் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்களே, இனியும் இந்த கூட்டணி தேவைதானா என்று விவாதிக்க தொடங்கி இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆக்கிரமிப்புகளால, ரூ.2 கோடி மதிப்பிலான திட்டம் கிணத்துல போட்ட கல் போல கிடக்குதாமே எங்கே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின் பேட்டை மாவட்டத்துல லி என்று தொடங்குற 3 எழுத்து பேரூர் ஆட்சியில ரூ.2 கோடியில நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நிதி ஒதுக்கீடு செஞ்சாங்க, அந்த இடம் ஆக்கிரமிப்புல இருக்குதாம்.. இதனால வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமித்த இடத்தை மீட்டெடுத்திருக்காங்க.. அப்புறம் எரிவாயு மேடை அமைக்க போயிருக்காங்க.. ஆனால ஆக்கிரமிப்புக்காரர் பணி செய்ய விடாமல் தடுக்குறாராம்.. இதனால காக்கிகள் துறையிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தால், பாதுகாப்புக்கு யாரையும் அனுப்பாமல் ஏதேதோ, காரணங்களை சொல்லி தட்டிக்கழிக்கிறாங்களாம்.. இதனால நிதி ஒதுக்கியும் பணி செய்ய முடியாம அதிகாரிகள் திணறி வர்றாங்களாம்.. இப்ப அந்த பணிகள் கிணத்துல போட்ட கல் போல கிடக்குதாம்.. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கணும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.