சேலம்: சேலம் மாவட்டம் அரியானூரில், மத்திய மாவட்டம் மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி அமமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: முருகன் மாநாட்டில் தந்தை பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி தெரிவிக்கப்பட்டு இருந்த வார்த்தைகளை ஏற்று கொள்ள முடியாது. மாநாட்டில் திராவிடத்தை பற்றி பேசிய வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம்.
கூட்டணி கட்சிகளான அமமுக, அதிமுக போன்ற கட்சிகள் எல்லாம் பேரறிஞர் அண்ணா வழியில் வந்தவர்கள். அவர்களை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்தி சென்ற பாதையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மதுரையில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டில் அந்த நிகழ்வை தவிர்த்து இருக்க வேண்டும், அவர்கள் பெரியார், அண்ணா படக்காட்சியை காண்பித்தது கண்டனத்திற்குரியது.
பக்தி மாநாட்டில் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டதால், அரசியல் கட்சி மாநாடாக கருதுகிறார்கள். அமித்ஷா முதலில் வந்தது, அதிமுக கூட்டணி இணைப்புக்காக. பின்னர் அவரது கட்சி நிகழ்ச்சிக்காக வந்தார். நாங்கள் விருப்பப்பட்டால் உறுதியாக அவரை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.