Saturday, July 19, 2025
Home செய்திகள்அரசியல் ‘இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது’முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றம்: ஐகோர்ட் நிபந்தனைகளை மீறியதால் பரபரப்பு

‘இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது’முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றம்: ஐகோர்ட் நிபந்தனைகளை மீறியதால் பரபரப்பு

by MuthuKumar

மதுரை: மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டில், இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என வெளிப்படையாக விதிகளை மீறி அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. முன்னதாக, மதுரை ரிங்ரோடு திடலில் கடந்த 16ம் தேதியன்று முருகனின் அறுபடை வீடுகளின் தரிசனத்திற்கான காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு, தினமும் பலர் தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாகக் கொண்ட மாநாட்டு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த மாநாட்டிற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பல்லாயிரம் பேர் இணைந்து ‘கந்த சஷ்டி கவசம்’ பாடினர்.

மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் தீபம் ஏற்ற வேண்டும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூரை நடத்திய பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது, திருப்பரங்குன்றம் மலை போல குன்றம் குமரனுக்கே என்பதாக அனைத்து மலைகளும் காக்கப்பட வேண்டும், கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும், வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் இந்து வாக்குகள் ஒன்றாக இருக்க வேண்டும்; இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டுப் போடக்கூடாது, மாதம்தோறும் எல்லோர் வீட்டிலும் கோயிலிலும் சஷ்டி நாளில் கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும் ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐகோர்ட் கிளையில் மாநாட்டில் அரசியல் பேச மாட்டோம் என்று உறுதி தந்திருந்த நிலையில் விதிகளை மீறி வெளிப்படையாக திருப்பரங்குன்றம் மலை பிரச்னை துவங்கி பலதரப்பட்ட அரசியல் விஷயங்கள் பலராலும் பேசப்பட்டன. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கடும் போக்குவரத்து நெரிசல்: மாநாட்டிற்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில் 2 துணை கமிஷனர்கள், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநாட்டுக்கு வந்தவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உணவு கிடைக்காமல் திண்டாடிய மக்கள்: குடையான நாற்காலி
நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால், மாநாட்டுக்கு வந்தவர்கள் உரிய கூரை வசதியின்றி நிழல் தேடி அலைந்தனர். பலர், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப, நாற்காலிகளை தலைக்கு மேல் தூக்கி, குடை போல பிடித்துக் கொண்டனர். மேலும் மதிய உணவு கிடைக்காமல் தவித்தனர். சாலைகளின் இருபுறம் கொடிக்கம்பங்களால் வாகனம் செல்வதில் பெரும் சிரமமிருந்தது. கொடி கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்ததும் பாதிப்பைத் தந்தது.

ஒரே விமானத்தில் வந்த அண்ணாமலை, சீமான் நித்யானந்தா சீடர்களும் பங்கேற்பு
முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையும், தனது கட்சி நிகழ்ச்சிக்காக சீமானும் சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மதுரை வந்திறங்கினர். அண்ணாமலை, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தனி விமானத்தில் வர இருந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை வரவேற்க விமான நிலைய காத்திருப்பு அறைக்கு சென்றார். வெளியில் வந்த சீமானிடம், அங்கு காத்திருந்த நித்யானந்தாவின் சீடர்கள், ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா ஹிஸ்ட்ரி’ என்ற நித்யானந்தாவின் படத்துடன் கூடிய பெரிய புத்தகத்தை வழங்கி, தங்களை அறிமுகப்படுத்தினர். அப்போது அவர்களிடம் சீமான், ‘நித்யானந்தா நல்லா இருக்காரா?’ என்று விசாரித்தார்.

நீலத்துக்கு மாறிய காவி உடைகள்
பாஜ மற்றும் இந்து முன்னணி சார்பில் நடக்கும் கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகளில் எங்கும், எதிலும் காவிமயமாக காட்சியளிக்கும். எப்போதும் காவி உடையில் களம் காணும் பாஜ நிர்வாகிகள், நேற்று முழுக்க முழுக்க ஆன்மிக மாநாடு என்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், நீல நிற வேட்டி, துண்டுடன் கலந்து கொண்டனர்.

மூச்சுத்திணறி பெண் பலி
சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் கவிதா (55). இவர் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வேனில் 20 பேருடன் வந்து விட்டு, நேற்றிரவு ஊர் திரும்பி கொண்டிருந்தார். மேலூர் அருகே வேன் சென்ற போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. வேனில் இருந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கவிதா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிமுக தலைவர்கள் முன்னிலையில் பெரியார், அண்ணாவுக்கு அவமரியாதை

பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்த பின் மக்களுக்கு எதிரான திட்டங்கள், தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்களை மீண்டும் அதிமுக தலைவர்கள் ஆதரிக்க தொடங்கி உள்ளனர். இந்த சூழலில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றப்பட்ட பிறகு, மாநாட்டு மேடை அருகே இருந்த ராட்சத திரையில் இந்து முன்னணியினர் தயாரித்து இருந்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அந்த காட்சியின் பின்னணியில் ‘தர்மம் காக்க..’ என்ற குரல் ஒலித்தபடி இந்து முன்னணியின் முந்தைய தலைவர்கள் ராமகோபாலன் துவங்கி பலரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ‘அதர்மம் ஒழிக்க..’ என்ற குரல் ஒலித்தபடி பெரியார், அண்ணா படங்களை திரையில் காட்டினர். இதை பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் பிறகும், ‘கருப்புச் சட்டைக்காரர்கள்’ என்று பெரியார் ஆதரவாளர்களையும், ‘உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்’ என்றும் அடுத்தடுத்து பாஜ நிர்வாகிகள் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பேசியதில் அதிமுகவினரின் முகம் சுருங்கியது. இதனால், திடீரென செல்லூர் ராஜூ மேடையை விட்டு எழுந்து கூட்டத்தை விட்டு விறுவிறுவென வெளியேறிச் சென்றார். அவரிடம் பேட்டி காண செய்தியாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர் எதுவும் பேசாமல் வெளியேறிச் சென்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi