டாக்கா: ஆட்சி கவிழ்ப்பின் போது ஏற்பட்ட படுகொலைகள் தொடர்பான மனித குலத்திற்கு எதிரான குற்ற வழக்கில் ஜூலை 1ல் ஆஜராக ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்தவர் ஷேக் ஹசீனா. கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், அவரது ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இதையடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்த மக்கள் எழுச்சியின் போது நடந்த கூட்டுப் படுகொலைகள் மற்றும் ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துசமான் கான் கமல் மற்றும் முன்னாள் காவல்துறை தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் உள்ளிட்டோர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுப் பதிவு விசாரணை, வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறும் என்று வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் சரணடையுமாறு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், அவர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, நீதிபதி எம்.டி.கோலம் முர்துசா மொசும்டர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தீர்ப்பாய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாத பட்சத்திலும், அவர்கள் இல்லாமலேயே வழக்கு விசாரணை நடத்தப்படும் என்றும், அவர்களுக்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மூவர் மீதும் மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.