சென்னை: திருநின்றவூர் அருகே விசிக பெண் கவுன்சிலரை சரமாரியாக கத்தியால் வெட்டி படுகொலை செய்த கணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த திருநின்றவூர் பெரியார் காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (32), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகர செயலாளராக உள்ளார். இவரது மனைவி கோமதி (28). இவர், திருநின்றவூர் நகராட்சி 26வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலராக இருந்தார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கோமதிக்கும், திருநின்றவூர் ராமதாஸ்புரம் சரித்திர பதிவேடு குற்றவாளியான மோசஸ் தேவா என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. மோசஸ் தேவா மீது 5 கொலை வழக்கு உள்ளது. நாளடைவில் இவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோசஸ் தேவாவுடன் கோமதி சேர்ந்திருக்கும் புகைப்படம் அவரது செல்போனில் இருப்பதை ஸ்டீபன் ராஜின் தம்பி அஜித் பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அண்ணன் ஸ்டீபன் ராஜிடம் கூறினார். இதுகுறித்து ஸ்டீபன் ராஜ், உடனே கோமதியிடம் கேட்டுள்ளார். அப்போது முதல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வாரம் கோமதி கோபித்துக்கொண்டு அதே தெருவில் வசிக்கும் சித்தி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் கோமதி வெளியே புறப்பட்டார். இதனைக் கண்ட ஸ்டீபன் ராஜ் பைக்கில் பின்தொடர்ந்தார்.
அவரது தம்பி அஜித், உறவினர் ஜான்சன் மற்றும் நண்பர்கள் சுனில், சமுத்திரம் ஆகியோர் ஆட்டோவில் பின் தொடர்ந்தனர். ஆவடி சோதனைச்சாவடி அருகே ஆட்டோவை ஸ்டீபன் ராஜ் வழிமடக்கினார். அப்போது, ‘எதற்காக ஆட்டோவை நிறுத்தினீர்கள்’ என்று கோமதி கேட்டுள்ளார். அதற்கு ஸ்டீபன்ராஜ், ‘எந்தவித தகராறும் நமக்குள் வேண்டாம். குடும்பம் நடத்த வா’ என்று சமாதானம் பேசி அழைத்துள்ளார். அதற்கு கோமதி மறுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சமாதானம் பேசி கோமதியை ஆட்டோவில் கோமதியை அழைத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார் ஸ்டீபன்ராஜ். பைக்கை உறவினர் ஓட்டி வந்தார்.
திருநின்றவூர் அருகே அரிசி ஆலை பகுதியில் வந்தபோது, ‘என்னை இறக்கி விடுங்கள், நான் உங்களுடன் வர மாட்டேன்’ என்று கோமதி கோபத்தில் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் அதிகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்டீபன்ராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோமதியை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முகம், கழுத்து பகுதியில் சரமாரி வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கோமதி, துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட 5 பேரும் தலைமறைவாகினர்.
திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெமிலிச்சேரியில் பதுங்கியிருந்த ஸ்டீபன் ராஜ், அஜித், ஜான்சன் ஆகியோரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து ஸ்டீபன் ராஜ், அஜித், ஜான்சன் ஆகியோரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.