மதுரை: மதுரையில் மாமியார், மருமகள் இருவரும் கழுத்தறுத்து கொலை செய்யப் பட்டனர். மதுரை, எல்லீஸ்நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). கார் டிரைவர். இவரது மனைவி அழகுப்பிரியா (20). மணிகண்டனின் தாயார் மகிழம்மாள் என்ற மயிலம்மாள் (65). டிரைவர் வேலைக்கு சென்று விட்டு மணிகண்டன் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி, தாயார் இல்லையெனத் தெரிந்தது. இரவில் வீட்டிலேயே தங்கினார். நேற்று மாலை வீட்டின் பின்புறம் பழைய சாமான்கள் வைத்திருந்த அறையில் ரத்தக்கறை இருப்பது தெரிந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் ரத்த வெள்ளத்தில் மயிலம்மாள், அழகுப்பிரியா இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து எஸ்எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்த தனது அக்காள் மகன் குணசீலனிடம் கேட்டதற்கு, அமாவாசைக்காக சாமி கும்பிட மனைவி, தாயார் இருவரும் சென்று விட்டதாக தெரிவித்தார். இதனால், இருவரும் கொலை செய்யப்பட்டு வீட்டிற்குள் உடல்கள் இருந்தது தெரியாமல் வீட்டிலேயே தங்கி இருந்ததாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, வீட்டிற்கு வந்து சென்ற குணசீலன், அவரது நண்பர் ரிஷி ஆகிய 2 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.