கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தாய்மாமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 35 வயது மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். சம்பந்தப்பட்ட தொழிலாளி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் தொழிலாளியின் மனைவியை அவரது சித்தப்பா மகனான திண்டிவனத்தை சேர்ந்த சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜீவா(25) என்பவர் கே.ஆடூருக்கு வந்து தனது சகோதரி மற்றும் 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். மூத்த மகன் மட்டும் தந்தையிடம் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி நள்ளிரவு ஜீவா, தனது சகோதரி கணவரின் உறவினர்களை தொடர்பு கொண்டு சகோதரியின் 3 வயது மகள் மயங்கி விழுந்து இறந்து விட்டதாகவும், அவரை பேருந்தில் தாயாருடன் அனுப்பி வைப்பதாக கூறி இருக்கிறார். இதையடுத்து உறவினர்கள் கடலூர் பேருந்து நிலையத்தில் காந்திருந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெண் தனது 3 வயது மகளை கையில் வைத்தபடி கடலூர் உழவர்சந்தை அருகே நின்றிருந்தார். உறவினர்கள் குழந்தையை பார்த்தபோது இறந்த நிலையில் இருந்தது. உடலில் காயங்கள் இருந்தன. அருகில் மற்ற இரண்டு குழந்தைகளும் நின்றிருந்தன. இதனால் உறவினர்கள் அந்தப்பெண்ணை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையின் தந்தை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஜீவா தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்தது. அதில் இறந்துபோன சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ஜீவாவை(25) திருவண்ணாமலையில் கைது செய்து கடலூருக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் குமந்தான்மேடு சோதனை சாவடி அருகில் சிறுநீர் கழிக்க போவதாக ஜீவா போலீசாரிடம் கேட்டுள்ளார்.
இதனால் போலீசார் அவரை வேனிலிருந்து இறக்கி விட்டனர். அப்போது ஜீவா திடீரென பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். இதில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் ஜீவாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சகோதரியின் 3 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்து அடித்துக்ெகாலை செய்ததை ஜீவா ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிகிச்சை முடிந்து மீண்டும் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜீவா சிறையில் அடைக்கப்படுவார். இதற்கிடையே சிறுமி கொலை விவகாரத்தில் அவரது தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.