சென்னை: கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரையும் அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த மாதம் 18ம் தேதி பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த மறுநாளே அரக்கோணம் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி ஆகிய மூன்று பேர் வழக்கறிஞர் மூலம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அதேபோல நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார், முத்துக்குமார், அரக்கோணம் மோகன், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின் உள்ளிட்டோர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 11 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அதிமுக 111வது வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய இருவருக்கும் ஆற்காடு சுரேஷ் வழக்கில் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பதுங்கி இருந்தவர்களை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். சென்னையில் ரவுடி கொலை வழக்கில் அதிமுக முக்கிய நிர்வாகிகளே நேரடியாக ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த 2 அதிமுக நிர்வாகிகள்அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டு, அதிமுகவுக்கு களங்கம், உண்டாகும் வகையில் செயல்பட்ட தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த சி.ஜான்கென்னடி (ஆயிரம் விளக்கு வடக்கு பகுதி அதிமுக மவட்ட பிரதிநிதி), பி.சுதாகர் பிரசாத் (111 கிழக்கு வட்ட செயலாளர், ஆயிரம் விளக்கு வடக்கு பகுதி) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து ெபாறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.