வேலூர்: கள்ளக்காதலி தன்னிடம் பேச மறுத்ததால் அடித்துக்கொலை செய்துவிட்டு, வாலிபரும் தற்கொலை செய்து கொண்டார். வேலூர் சின்னஅல்லாபுரம் கே.கே.நகர் திரவுபதியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு(33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்பாஷா என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து ேவறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சின்னஅல்லாபுரத்தில் பெற்றோருடன் வசித்துள்ளார்.
தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலூர் விருபாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ்(35) என்பவரும் வேலை செய்துள்ளார். திருமணமாகாத அவருக்கும், சபீனாபானுவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு வரவில்லை. இதைதொடர்ந்து சபீனாபானு கடந்த 2 மாதங்களாக சுரேசுடன் பேசுவதை நிறுத்தி விட்டாராம். பலமுறை அவர் தொடர்பு கொண்டும் பேச மறுத்ததாக தெரிகிறது.
இதனால் கடும் கோபம் அடைந்த சுரேஷ், நேற்று முன்தினம் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் சபீனாபானு போனை எடுக்கவில்லை. இதையடுத்து இரவு 11.30 மணியளவில் சுரேஷ், சின்னஅல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு சென்று, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு சபீனாபானு, எதுவாக இருந்தாலும் நாளை காலை பேசிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார். உடனே தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுத்தனர். இருவரையும் இரும்பு ராடால் தலையில் தாக்கினார். இதில் அவர்கள் மயங்்கி சாயவே அதிர்ச்சியடைந்த சபீனாபானு வெளியே தப்பியோடியுள்ளார். அவரை துரத்திச் சென்ற சுரேஷ், சிறிது தூரத்தில் மடக்கி சரமாரியாக தாக்கினார்.
இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் பைக்கில் ஏறி தப்பினார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். சுரேஷின் மொபைல் போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு சென்று பார்த்த போது, தனது அறையில் தூக்கில் தொங்கியபடி சுரேஷ் சடலமாக கிடந்தார். கள்ளக்காதலி சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது. படுகாயமடைந்த சபீனாபானுவின் பெற்றோர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.