சென்னை: சென்னையில் கடந்த 8 மாதங்களில் கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 412 பேரை மாநகர போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லையில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி 12 காவல் மாவட்டங்களில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 8 மாதங்களில் சென்னை மாநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 279 ரவுடிகள் மற்றும் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டு வந்த 71 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 49 குற்றவாளிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர், உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என 412 பேர் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.