‘‘சேலத்துக்கனி கட்சி நிறுவனருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காமே’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. சேலத்துக்கனி கட்சியில் தந்தை, மகன் மோதல் உச்சத்துக்கு வந்துள்ளதாம். இந்த மோதலில் நிறுவனர் ஆவேச பேச்சுகளை வெளிப்படுத்தி வருகிறாராம். தோட்டத்தில் அளித்த பேட்டியில் வைணவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்து இருந்தாராம். கோஷ்டி குறித்த கேள்விக்கு தந்தை, மகனுக்கும் கோஷ்டி எதுவும் இல்லை. மார்கழி மாதத்தில் பஜனை கோஷ்டிதான் வரும் என்று இந்து மதத்தின் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாராம்.
அரசியலை ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்தி பேசியதால் இந்து அமைப்புகளின் எதிர்ப்பு நிறுவனருக்கு எதிராக திரும்பி உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சியின் முக்கிய புள்ளிகளின் இதய துடிப்பு அதிகமாயிருச்சாமே.. ஏன்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொடநாட்டில் மம்மியின் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை விவகாரம் ரொம்பவே சூடுபிடிச்சிருக்கு. மம்மி திடீரென இயற்கையடைந்த நிலையில், அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுத்ததின் காரணமாக மாங்கனிக்காரர் முதன்மை மந்திரியானார். அந்நேரத்தில் பங்களாவுக்கு சொந்தக்காரரான சின்னமம்மி பரப்பனஅக்ரஹார ஜெயிலுக்கு போயிட்டார்.
உரிமையாளர்கள் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட இலைக்கட்சியை சேர்ந்த சிலரின் மேற்பார்வையில் உள்ளே புகுந்த கும்பலை சேர்ந்தவர்கள் காவலாளியை கொன்றுவிட்டு, பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக தொடர்ந்து ரத்தத்தின் ரத்தங்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனால் இந்த கொள்ளைக்கு தூண்டியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்காத நிலையில், கொள்ளையர்களை மட்டும் இலைக்கட்சி ஆட்சியின்போது பிடிச்சாங்களாம்.
அதே நேரத்தில் பங்களாவில் இருந்த சொத்து ஆவணங்கள் எல்லாமே போகவேண்டிய இடத்துக்கு போனதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து இருந்துக்கிட்டே இருக்குது. மம்மியின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் என்பவர்தான் ஆவணங்களை கொண்டுவந்து கொடுத்ததாக அவரோட அண்ணனும் சிபிசிஐடி கிட்ட புட்டுப்புட்டு வச்சிருக்காராம். ஆவணங்களை அழித்ததாக அவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்காரு. தற்போது இந்த வழக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்திடுமாம்.
ஒவ்வொரிடமாக விசாரணை நடந்துக்கிட்டிருக்கிற நிலையில், இலைக்கட்சி தலைவரின் ஊரில் இலைக்கட்சி முக்கியபுள்ளிகள் கலக்கத்தில் இருக்காங்களாம். அதுவும் ஆத்தூர், சங்ககிரி, ஆட்டையாம்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்களின் இதய துடிப்பு அதிகரித்ததுடன், தூக்கமின்றி தவிப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க. அவர்களையும் சிபிசிஐடி போலீஸ் நெருக்கி வரும் நிலையில், தலைமைக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லாதவாறு அவர்களே நடந்துக்கிறதா இலைக்கட்சி தொண்டர்களிடம் ஒரே பேச்சா இருக்குதாம்.
இதனால் எந்நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பீதி மாங்கனி மாவட்டத்துல ஏற்பட்டிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் மன்னர் மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் நிர்வாகிகள் திக்கு தெரியாமல் என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளனராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை முற்றியவுடன் ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, ஓபிஎஸ் தனியாக நிர்வாகிகள் நியமனத்தில் ஈடுபட்டார். அதேபோல் மன்னர் மாவட்டத்திலும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
ஓபிஎஸ் பாஜவுக்கு ஆதரவாகவும் மோடிக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசி வந்தார். கட்டாயம் பாஜ தனக்கு அதிமுகவை மீட்டு தரும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் பேசி வந்தார். இந்நிலையில் சென்னை வந்த ஷா ஓபிஎஸ்சை புறக்கணித்தார். மேலும் அதிமுக உள்விவகாரத்தில் ஷா தலையிடமாட்டோம் என்று தெரிவித்துவிட்டார். இதனால் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகின்றனர். குறிப்பாக ஒரு சில நிர்வாகிகள் ஓபிஎஸ்சை திட்டி வருகின்றனர். அதை செய்றேன், இதை செய்றேன்னு என சொல்லிட்டு சுத்துறார். அவரால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை.
அவர் சுயலாபத்தற்காக நம்மை பயன்படுத்தி வருகிறார். இனி இபிஎஸ் அணிக்கு சென்றால் நம்மை மதிக்க மாட்டார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அதிகாரி பெயரை சொல்லி வசூலில் இறங்கி கலக்குறாராமே ஒரு ஊழியர்..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில வாகனங்களை கண்காணிக்க கூடிய அலுவலகத்தில கடைநிலை ஊழியர் ஒருவரை மையமாக வைத்து பகீர் புகார் வெளியாகி இருக்காம்.
அலுவலக உயர் அதிகாரி பெயரை சொல்லி, தனியாக வசூலிப்பில் இந்த ஊழியர் இறங்கி இருப்பதுடன், அலுவலகத்துக்கு வருபவர்களை மிரட்டவும் செய்வதாக புகார்ல சொல்லி இருக்காங்களாம். லாரிகள், டெம்போக்களை வைத்து தொழில் செய்யும் உரிமையாளர்கள், பயிற்சி பள்ளிகள் உள்பட அந்த அலுவலகத்தை மையமாக வைத்து இயங்குகிற பல தரப்பினரையும் சந்தித்து தனியாக வசூல் வேலையை நடத்துகிறாராம்.
ஏற்கனவே இந்த அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதுல வேற, இந்த ஊழியரின் வசூல் வேட்டை அலுவலகத்தில பணியாற்ற கூடிய மற்ற ஊழியர்கள், அலுவலர்களையும் கதிகலங்க வைத்திருக்கிறதாம் . இவரு செய்கிற சேட்டையால எந்த நேரத்தில லஞ்ச ஒழிப்பு போலீசு, வர போகுதோ என்ற பதற்றத்திலேயே நாளையும், பொழுதையும் கழிக்க வேண்டியதாக இருக்கு என்று பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.