பூந்தமல்லி: மதுரவாயலில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் கன்னியம்மன் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி கிழங்கு சரவணனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பினர். இதற்கிடையே, கிழங்கு சரவணன் கொலையில் தொடர்புடைய 5 பேர் ஆற்காடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மாயா (33), செல்வம் (24), மகேந்திரன் (30) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பிறகு 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.