பெரெய்லி: உத்தரப்பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் வந்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள கெமசராய் கிராமத்தை சேர்ந்தவர் நரேந்திர துபே. இவர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லி-அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பீகாரை சேர்ந்த எட்டாப் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் துபே, எட்டாபை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சாட்சியங்களின் அடிப்படையில் துபே குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் எட்டாப் பீகாரில் உள்ள அவரது மாமியார் வீட்டில் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வீடியோ எடுத்து ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து எட்டாப் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் நேரில் ஆஜரானார். இதனை தொடர்ந்து துபே நிரபராதி என்று நீதிமன்றம் கூறி அவரை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.