புதுடெல்லி: பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக பாஜவும், நிதிஷ் குமாரும் மாற்றி விட்டனர் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் வசித்து வந்த தொழிலதிபரும், பாஜ பிரமுகருமான கோபால் கெம்கா கடந்த வௌ்ளிக்கிழமை இரவு தன் வீட்டின் முன் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி தன் எக்ஸ் தள பதிவில், “தொழிலதிபர் கோபால் கெம்கா வௌிப்படையாக சுட்டு கொல்லப்பட்ட சம்பவம், பாஜவும், நிதிஷ் குமாரும் சேர்ந்து பீகாரை குற்ற தலைநகராக மாற்றி விட்டதை மீண்டும் நிரூபித்துள்ளது. பீகார் தற்போது கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு போன்ற குற்ற சம்பவங்களின் நிழலில் வாழ்கிறது. குற்றங்கள் தற்போது பீகாரின் புதிய வழக்கமாக மாறி விட்டது. இங்கு அரசாங்கம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது” என காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “பீகாரின் சகோதர, சகோதரிகளே, இனியும் இந்த அநீதியை பொறுத்து கொள்ள முடியாது. உங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்துக்கு பொறுப்பேற்க முடியாது.
பீகாரில் இப்போது வளர்ச்சியில்லை. மாறாக அச்சமே உள்ளது. ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு கொள்ளையும், ஒவ்வொரு தோட்டாவும் மாற்றத்துக்கான முழக்கம். இப்போது பீகாருக்கான புதிய நேரம் வந்து விட்டது. ஒவ்வொரு வாக்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கு மட்டுமல்ல, பீகாரை காப்பாற்றுவதற்கும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.