மூணாறு: மூணாறு அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நாகர்கோவில் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகள், ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர் அடங்கிய 42 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இக்குழுவினர் மூணாறில் உள்ள பிரபல சுற்றுலாத்தலங்களை பார்வையிட்டு ரசித்தனர்.
நேற்று பிற்பகல் மூணாறு அருகே உள்ள குண்டளை அணைக்கட்டிற்கு சென்றனர். அப்போது மாட்டுப்பட்டி எக்கோ பாயிண்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆதிகா (19), வேனிகா (19) ஆகிய 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த சுதன் (19), கெவின் (19) ஆகிய 2 மாணவர்கள், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 19 மாணவர்கள் மூணாறு மற்றும் அடிமாலி பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்சின் அதிவேகமே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மூணாறுக்கு சுற்றுலா வந்த பஸ் கவிழ்ந்து 2 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.