மூணாறு: கோடை சீசனை அனுபவிக்க மூணாறில் குவியும் சுற்றுலாப் பயணிகளால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் குவியும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மூணாறில் தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க கேரளா மட்டுமல்லாமல், தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். இங்குள்ள ரவிகுளம் தேசியப் பூங்கா, மாட்டுப்பெட்டி டேம், குண்டளை அணைக்கட்டு மற்றும் படகு சவாரி மையங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இதனால், சுற்றுலா தொழிலைச் சார்ந்து வாழும் வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவதால், முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.