* குடியிருப்பு பகுதியில் அடிக்கடி முகாம்
* தோட்ட தொழிலாளர்கள் அச்சம்
மூணாறு: மூணாறு அருகே, நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டெருமையால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். அடிக்கடி குடியிருப்பு பகுதியில் முகாமிடுவதால், குழந்தைகள் கூட வெளியில் வருவதற்கு அச்சமடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு கேரள மக்கள் மட்டுமல்லாமல், வெளி மாநில மக்களும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் சுற்றுலா வந்து செல்கின்றனர். இப்பகுதியில் மாட்டுப்பட்டி டேம், ரவிகுளம் தேசியப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் புகழ்பெற்றவை.
மூணாறைச் சுற்றி வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தேயிலைத் தோட்டங்களின் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வரும் காட்டெருமை, யானை, புலி வனவிலங்குகளால் தொழிலாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
ஒற்றை காட்டெருமை உலா…
இந்த நிலையில், மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட்டில் உள்ள ஈஸ்ட் டிவிஷனில், நேற்று பகல் 4 மணி அளவில், ஒற்றை காட்டெருமை ஒன்று தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே சுற்றித் திரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. லைன்ஸ் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள தோட்டங்களில் பயிர்களை தின்பதற்கு ஒற்றை காட்டெருமை வருகிறது. இதனால், பகல் நேரங்களில் கூட குழந்தைகள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காட்டெருமைகள் மூணாறில் தொழிலாளர்களை தாக்கிய சம்பவமும் உண்டு. எனவே, காட்டெருமை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.