சென்னை: நகராட்சி, பேரூராட்சி பெல்ட் ஏரியாவில் உள்ள கட்டுப்பாட்டை தளர்த்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று விசிக எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். திருப்போரூர் தொகுதி விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகாலமாக மேய்க்கால் பகுதியில் குடியிருந்து வரும் எளிய மக்கள், மின் இணைப்பு இல்லாமல் மிக, மிக கடினமான வாழ்க்கை சூழலில் உள்ளனர். அவர்களின் நிலைமையை மாற்றி மின்னிணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவச வீடுமனை பட்டா ஆட்சேபணையற்ற நத்தம் புறம்போக்கு வகைக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது, ஏனைய ஆட்சேபணையற்ற அரசு நிலங்களான அணாதீனம், தீர்வை ஏற்பட்ட புஞ்சை தரிசு, தீர்வை ஏற்பட்ட நஞ்சை தரிசு, காலேஜ் புறம்போக்கு, உரக்குழி, குன்று மலை, கல்லாங்குத்து, கரடு பாறை, மேடு பள்ளம், நந்தவனம், உவர் பூமி, விளையாட்டு மைதானம், குவாரி, தடம், தரிசு, திடல், வெட்டுக்குழி, தீர்வை ஏற்படாத புஞ்சை தரிசு, ஜல்லிக்குழி ஆகியவற்றிலும் இலவச வீடு மனை பட்டா வழங்க வேண்டும்.
நகராட்சிகள் பேரூராட்சிகளுக்கு என உள்ள பெல்ட் ஏரியா கட்டுப்பாட்டையும் தளர்த்தி அவர்களுக்கு இலவச வீடு மனை பட்டா வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய சமூகத்தின் வறிய நிலையில் இருந்து, மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான முழுமையான தகுதி இருந்தும் கூட அரசு வரையறுத்துள்ள சில நிபந்தனைகளின் செயல்படுத்தலில் உள்ள சிக்கலால் பெற முடியாமல் உள்ளனர். அரசு வரையறுத்துள்ள தகுதி இல்லையென்றாலும் சமூக பொருளாதார அளவுகோலில் அவர்கள் தகுதியானவர்களா என்பதை அரசு வருவாய், உள்ளாட்சி களப்பணியாளர்கள் கொண்டு கண்டறிந்து அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.