
ஊட்டி: கோடை சீசன் துவங்கியுள்ளதால் பூங்கா நடைபாதை கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர். ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள நடைபாதைகளில் கடந்த 50 ஆண்டுகளாக சிலர் சிறு சிறு கடைகளை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் பழம், பூக்கம், வெம்மை ஆடைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், நடைபாதை கடைகளை அகற்றிய நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் நிரந்தர கடைகளை கட்டி கொடுத்தது. அந்த கடைகளை வியாபாரிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால், வழங்கப்படவில்லை.
மாறாக, அந்த கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெண்டர் விடுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், தற்போது அப்பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மீண்டும் சாலையோரங்களில் உள்ள நடைபாதைகளில் கடைகளை வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், பூங்காவிற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். எனவே, வியாபாரிகள் நடைபாதைகளில் கடைகளை வைத்துள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நடைபாதை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு கட்டப்பட்டுள்ள கடைகளை உடனடியாக வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இதன் மூலம் இப்பகுதியில் ஏற்படும் நெரிசல்களை குறைக்க முடியும். மேலும், பூங்கா நுழைவு வாயில் பகுதியும் அழகாக காட்சியளிக்கும். எனவே, நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் இப்பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.