புதுடெல்லி: டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு அரசின் ஒப்புதல் இல்லாமல் உறுப்பினர்களை நியமிக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் ஒன்றிய அரசின் துணை நிலை ஆளுநர் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கிடையே அதிகார மோதல் இருந்து வருகிறது. டெல்லி அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு, துணை நிலை ஆளுநர் அனுமதி வழங்காமல் இழுத்தடித்தும், மறுத்தும் வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவின் நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி தரப்பில் தொடரப்பட்ட ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியின் ஆட்சி அதிகாரத்தில் பொது அமைதி, காவல் மற்றும் நிலம் ஆகியவை ஒன்றிய அரசின் வரம்புக்குள் வருவதால், அதன் மீது டெல்லி அரசு தலையிட முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பின்பற்றாமல் ஆளுநர் வி.கே.சக்சேனா, டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து வந்தார். இதையடுத்து ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றம், ‘இந்த வழக்கை பொருத்தமட்டில் அமைச்சர் குழுவின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா? என்ற கேள்வியின் கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டது. டெல்லி அரசு அல்லது அமைச்சரவை குழு ஆகியவற்றின் ஆலோசனைகளையோ, கருத்துக்களையோ அல்லது ஒப்புதல்களையோ துணை நிலை ஆளுநர் கட்டாயம் கேட்க வேண்டும் என்பது கிடையாது. அவர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமனம் செய்ய அதிகாரம் உண்டு.
இதனை ஏற்கனவே செய்யப்பட்ட சட்ட திருத்தம் என்பது தெளிவாக கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது’ என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் டெல்லி கார்ப்பரேஷனுக்கு உறுப்பினர்களை நியமிக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே மதுபானக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களை சிறையில் இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்பானது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.