சென்னை: தமிழ்நாடு அரசால், தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக செம்மொழியான நம் தமிழ் மொழியின் பெருமையை பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் பறைசாற்றும் வண்ணம் செயற்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலம், வாஷி நகரில் செயற்பட்டு வரும் நவி மும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டடப் புனரமைப்புக்கென இதுவரை ரூபாய் 1 கோடியே 25 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் இன்று புதன் கிழமை திறந்து வைத்து பின்வருமாறு விழாப் பேருரை ஆற்றினார். ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம்.
உலகின் மூத்த குடியாக விளங்கும் நம் தமிழ்க்குடியினர் தற்போது உலகமெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் தமது பிள்ளைகள் தமிழைப் பயில ஊக்குவித்து வருகிறார்கள். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பிள்ளைகள் தாம் எதற்காகத் தமிழ்மொழியைக் கற்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவும் தமிழ்மொழியைக் கற்பதால் அடையக் கூடிய நன்மைகள் யாவை? என்பதையும் ஆசிரியர்கள் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும். அதற்கான போதிய பயிற்சிகளை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான பாடப் புத்தகங்கள். கற்றல் உபகரணங்கள் கற்பித்தல் மையங்கள் அமைத்துத் தரவேண்டும்.
நவீன அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமாயின் அதன் வேர்களில் ஒன்றாக அறிவியல் விளங்குவது அவசியம். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டாலேயே தமிழ் தொடர்ந்து வாழும் நிலை உருவாகும். நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு உண்டு.புலம் பெயர் நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளால் இதற்கு அளப்பரிய பங்களிப்பை நல்க முடியும். அதற்கான வழிகாட்டலை மூத்த தலைமுறையினர் அவர்களுக்கு வழங்குதல் அவசியம். எனவே, தமிழ்நாடு அரசு இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் அம்மாநிலங்களில் தமிழ்ப் பண்பாட்டை பரப்பிடும் வகையில் தமிழ் அமைப்பு / தமிழ்ச் சங்கங்கள் நிறுவி செயற்படுத்தி வருபவர்களின் தமிழ் உணர்வை ஊக்கப்படுத்தும் பொருட்டு, கோரிக்கையின் அடிப்படையில், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், பெங்களூர் தமிழ்ச் சங்கம், கருநாடகத் தமிழ் உயர்நிலைப் பள்ளி, ஹுப்ளி, சண்டிகர் தமிழ் மன்றம், கல்கத்தா பாரதித் தமிழ்ச் சங்கம், ஆகியவற்றிற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில், தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகள் வளர்த்தல், பிற மொழிகள் கற்பதை ஆதரித்தல், கல்விப்பணிகள் மேற்கொள்ளல், திறமைசாலிகளான மாணவர்களுக்குச் சங்க நிதியிலிருந்து அல்லது நன்கொடைகளிலிருந்து கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகள் வழங்குதல், நூலகம் அமைத்து, வாசகர்கள் படிக்க வசதிகள் வழங்குதல், அறிவு நலம் பெருக புத்தகம், வார/ இதழ்கள், நாளிதழ்கள் வாங்குதல், நினைவு மலர்கள் அச்சடித்து வெளியிடுதல் மாத, தமிழ் சமூகத்திற்கு தேவைப்படும் நிவாரணப் பணிகளில் பங்களிப்பு வழங்குதல் ஆகியவற்றை தனது குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வரும் நவி மும்பை தமிழ்ச் சங்கக் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கென இதுவரை ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் விருது மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற இந்த நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதியளித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள தங்கக் கட்டிகளுக்கு மத்தியில் வைரக் கல்லாக மின்னுகிற தலைவர்தான் நாமெல்லாம் அறிந்த கிருஷ்ணமூர்த்தி . நான் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரை சந்திக்கும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியாக சொல்லுவேன் கிருஷ்ணமூர்த்தியை நேற்று தான் சென்னையில் பார்த்தேன் என்று, இல்லை ஐயா இன்று அவர் மும்பை சென்றுவிட்டார் என்பார்.
தமிழ்நாட்டு அரசை சுற்றிச் சுற்றி வந்தே நவி மும்பை தமிழ்ச் சங்கத்திற்கு மாபெரும் கட்டடத்தினை கட்டிய பெருமை கிருஷ்ணமூர்த்தி அவர்களையேச் சேரும். அவர் பல்லாண்டு வாழ்க எனவும் நவி மும்பைத் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து சிறப்புடன் செயற்பட நல்வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில மின் உற்பத்தி நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பொன். அன்பழகன், மகராஷ்டிர மாநில திறன் வளர்ச்சி நிறுவனத் தலைமை நிருவாக அலுவலர் டாக்டர் நல். இராமசாமி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு. இரா. செல்வராசு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள், ஆகியோர் கலந்து கொண்டனர். நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ. ரெ. போ. கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.