மும்பை: மும்பையில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற தனியார் நிறுவன ஹெலிகாப்டர் புனேவுக்கு அருகே வந்தபோது தீடிரென தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த கேப்டன் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 3 பேர் உயிர் பிழைத்தனர். மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று சென்றது. அதில் கேப்டன் உள்பட 4 பேர் சென்றனர். அப்போது புனே மாவட்டம் முல்ஷி தாலுகா பாவுத் கிராமம் அருகில் ஹெலிகாப்டர் சென்றபோது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது.
இதில் கேப்டன் ஆனந்த் பலத்த காயமடைந்தார். மேலும் அதில் பயணித்த டீர் பாடியா, அமர்தீப் சிங், ராம் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த கேப்டனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் குளோபல் விக்ட்ரா நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக புனே காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் தேஷ்முக் கூறினார்.