மும்பை : ஆதார் அட்டை கோரி வங்கி கணக்கு தொடங்குவதை தாமதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மனுதாரருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வங்கிக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க யெஸ் வங்கி மறுத்ததாக மைக்ரோ ஃபைப்ர்ஸ் நிறுவனம் தரப்பில் 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் அவசியம் இல்லை என 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, குறிப்பிட்ட வங்கி ஆதார் இல்லாமல் கணக்கு தொடங்க ஒப்புக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு மீண்டும் ஆதாரை கோரி வங்கிக் கணக்கு தொடங்குவதை வங்கி நிறுவனம் தாமதப்படுத்தியதால், நஷ்டம் ஏற்பட்டதாக மனுதாரர் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வங்கிகள் வங்கி கணக்கு தொடங்க ஆதார் தகவல்களை சமர்ப்பிக்க வாடிக்கையாளர்களை வலியுறுத்த கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரருக்கு ரூ. 50000 இழப்பீடு வழங்க யெஸ் வங்கிக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது..