அகமதாபாத்: ஐபிஎல் 18வது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. குவாலிபயர் 1ல் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்தநிலையில், பைனலுக்கு நுழையும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் குவாலிபயர் -2, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பின்னர், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மழை நின்ற பிறகு 9.40 மணியளவில் போட்டி தொடங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், பேர்ஸ்டோவும் களம் இறங்கினர்.
ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து, 2வது விக்கெட்டிற்கு பேர்ஸ்டோவுடன் திலக் வர்மா கைகோர்த்தார். பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், களம் இறங்கிய சூர்யகுமார் 44 ரன்கள் எடுத்து பெவிலின் திரும்பினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றிபெற்றது.