சென்னை: நாடாளுமன்ற, சட்டமன்ற மதிப்பீடுகள் குழு நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்தது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதிப்பீடுகள் குழுவின் மூலம் அரசு நிதிஒதுக்கீடு மற்றும் செலவினங்களை கண்காணித்து ஆய்வு செய்து அதன் மூலம் அரசு நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான தேசிய மாநாடு வருகிற ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
மாராட்டிய சட்டப்பேரவையான விதான் பவனில் நடைபெறும் இம்மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து மதிப்பீடுகள் குழுத் தலைவர் காந்திராஜன், விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தமிழ்நாடு சார்பில் பிரதிநிதிகளாக கலந்து கொள்கின்றனர். இதற்காக இவர்கள் இன்று காலை விமானம் மூலம் மும்பை செல்கின்றனர்.