சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்குவதற்கான டெண்டரில் கலந்து கொள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. முதற்கட்டமாக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கடந்த மே மாதம் கோரியது.
அதில் ஒவ்வொரு மடிக்கணினிகள் 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்புத் திறன், 14 அல்லது 15.6 திரை, ப்ளூடூத் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த டெண்டரில் கலந்து கொள்ள டெல், ஏசர், லெனோவா, எச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர். டெண்டருக்கு முன் நடந்த கூட்டத்தில் நிறுவனங்களின் சந்தேகங்களுக்கு எல்காட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.