‘‘குட்கா சேல்ஸ் புகார் கொடுத்தவரை காக்கியே காட்டி கொடுத்தாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல குட்டிசிவகாசி என்று செல்லமாக அழைக்கப்படுற சப்-டிவிஷன், தமிழக-ஆந்திர எல்லையில அமைந்திருக்குது.. இங்க பரதத்தை அடைமொழியாக கொண்ட காக்கிகள் நிலையம் இயங்கி வருது.. இந்த ஸ்டேஷன் இருமாநில எல்லையில் இருப்பதால, அந்த பகுதியில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக இருந்து வருகிறதாம்.. குட்கா தொடர்பான புகார்களை அங்குள்ள பொதுமக்கள் நூறுக்கும், மாவட்ட காக்கி ஆபிசுக்கும் போன் போட்டு புகார் தெரிவிச்சிருக்காங்களாம்.. உடனே அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டு இருக்காங்க.. இதனால் பல ஆண்டுகளாக அந்த காக்கிகள் நிலையத்தில் இருக்குற 2 ஸ்டார் காக்கி, குட்கா சேல்ஸ் செய்ற நபர்கிட்டயே, இவன் தான் புகார் கொடுத்திருக்கான், நீ அவனை பார்த்துக்கோ, குட்காவ வித்துக்கோன்னு தைரியம் கொடுக்குறாங்களாம்.. அதுமட்டுமில்லாம, புகார் தெரிவித்த நபரை அழைச்சி, நாங்க தான் கேஸ் போடுறதாக சொல்லிட்டோமே.. நீ ஏன் பெரிய இடத்துக்கு எல்லாம் புகார் தெரிவிக்குறனு கடுகடுத்தார்களாம்.. அரசு என்ன தான் குட்கா ஒழிக்க நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்ற சில காக்கிகள் இருக்குற வரைக்கும், எதுவுமே செய்ய முடியாதுன்னு விஷயம் தெரிஞ்ச காக்கிகள் பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சி நிர்வாகி ஆட்டய போட்ட பலகோடி பஞ்சமி நிலம் விஷயம் தான் காட்டுத்தீ போல பரவுகிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தில் காராச்சேவுக்கு பெயர் போன ஊரில், மலராத கட்சியின் மாவட்ட பொறுப்பில் பழைய மூன்றெழுத்து குணச்சித்திர நடிகர் பெயரை முன்பாதியில் கொண்டவர் இருக்கிறார். இவர் தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் பள்ளியும் நடத்தி வருகிறார். இவர் தனது கட்சி பதவி மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, தனது பள்ளி அருகிலுள்ள பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை வளைத்து போட்டுள்ளதாக தகவல்கள் தீயாக பரவி வருதாம்.. பல கோடி மதிப்புள்ள இந்த பஞ்சமி நிலம் தற்போது பள்ளி வளாகத்திற்குள் சென்று விட்டதாம்.. தகவலறிந்த மலராத கட்சியை சேர்ந்த இவரது எதிர்தரப்பினர், பஞ்சமி நிலத்தை வளைத்து போட்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமைக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி வருகின்றனராம்.. இந்த தகவல் தற்போது ஊர் முழுவதும் பரவியதால், மலராத கட்சி நிர்வாகியிடம் இருந்து பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டுமென்றும், உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் பலரும் புகார் அளிக்க தயாராகி வருகின்றனராம்.. மேலும், தனது செல்வாக்கை பயன்படுத்தி, தமிழகத்தின் ரெண்டெழுத்து சர்ச்சை புகழ் விவிஐபியை பள்ளிக்கு கூட்டி வந்து தனது செல்வாக்கை காட்டினாராம்.. மேலும், பலரை அழைக்கவும் திட்டமாம்.. இவரைப் பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கும் தொடர்ச்சியாக புகார்கள், வந்து கொண்டிருப்பதால் விரைவில் நடவடிக்கை இருக்கும் என்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒன்றரை ஆண்டுக்கு அப்புறம் திடீரென விசாரணைக்கு வந்த சேலத்துக்காரர் மீதான வழக்கை தேனிக்காரரின் ஆதரவாளர்கள்தான் ரொம்பவே எதிர்பார்க்கிறாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் இலைக்கட்சி தலைவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், அசையும் அசையா சொத்துகள், தொழில், வருமானங்களுக்கான ஆவணங்களில் பொய்யான தகவலை தெரிவித்திருப்பதாக தேனியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சேலம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாரு.. இதையடுத்து சேலம் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி இலைக்கட்சி தலைவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செஞ்சதோடு மட்டுமல்லாமல் விசாரணையை தீவிரப்படுத்தினாங்க.. இதனால் அதிர்ச்சியடைந்த இலைக்கட்சி தலைவர், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்னு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செஞ்சாரு.. முதற்கட்டமா தொடர் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால போலீசாரும் விசாரணையை அப்படியே விட்டுட்டாங்க.. ஆனால் இலைக்கட்சி தலைவர் தாக்கல் செய்த மனு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரணைக்கு வரவில்லை. மனுதாரரும் எப்போது விசாரணைக்கு வரும் என ஆவலோடு காத்திருந்தாரு.. யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்துடுச்சாம்.. அதுவும் வழக்கு போட்ட இலைக்கட்சி தலைவரே டைம் கேட்டதா கட்சிக்காரங்க சொல்றாங்க.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவர் பதில் மனுவை தாக்கல் செய்தால் வழக்கு விசாரணை சூடு பிடிக்குமாம்.. அவ்வாறு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் வேகம் காட்டுவாங்களாம்.. அதைத்தான் மனுதாரர் மட்டுமல்லாது, தேனிக்காரரின் ஆதரவாளர்களும் எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுமுகங்கள் பட்டியல் தயாராவதால் புல்லட்சாமியின் அதிருப்தி தரப்பு பீதியில் இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் புல்லட்சாமி தலைமையிலான தேஜ கூட்டணி அரசாங்கம் நடக்கிறது.. இந்த அணியில சில மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியாளருங்க மீதே கடுமையான அதிருப்தியில இருக்கிறாங்களாம்.. குறிப்பாக புல்லட்சாமி கட்சியைச் சேர்ந்தவங்களே அவருடனான நெருங்கிய தொடர்பில் இருந்து விரக்தியில் ஒதுங்கி இருக்கிறார்களாம்.. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து புல்லட்சாமி தரப்பு மேற்கொண்டாலும் அதில் உடன்படாத நிலையில், தற்போது சிட்டிங் மக்கள் பிரதிநிதிகள் உள்ள குறிப்பிட்ட சில தொகுதிகளில் மாற்று வேட்பாளர்களை நிறுத்தும் திட்டத்தில் இருக்கிறதாம் புல்லட்சாமி தரப்பு.. அதிலும் கூட்டணி அமைவதற்கு ஏற்றார்போல் இறுதிகட்ட முடிவுகளை எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். இதை பல்ஸ் பார்த்த புல்லட்சாமிக்கு நெருக்கமானவர்கள் புதிதாக யாரை களமிறக்கலாம் என்ற தேர்வில் இறங்கி உள்ளார்களாம்.. அதில் மருத்துவர், தொழிலதிபர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே கடந்த காலங்களில் வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள் வரை சிட்டிங் மக்கள் பிரதிநிதிகளை காக்க வைத்து சீட் கொடுக்காமல் கழற்றிவிட்ட கதையை நினைத்து பீதியில் இருக்கிறதாம் புல்லட்சாமி கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தரப்பு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
பல கோடி நிலத்தை வளைத்த தாமரை நிர்வாகியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0
previous post